தேர்தல் களத்துக்கு வந்த ஆர்ட்ஸ் vs எஞ்சினியரிங் சண்டை…கோவை வேட்பாளர்களுக்காக நடக்கும் மோதல்

Published On:

| By vivekanandhan

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அதிமுக வேட்பாளர் சிங்கை ராஜேந்திரன் PSG கல்லூரியில் அவருடைய அப்பா எம்.எல்.ஏ வாக இருந்ததால் MLA கோட்டாவில் சீட்டு வாங்கி வந்ததாகவும், நான் கோட்டாவில் சீட்டு வாங்கி வரவில்லை என்றும் பேசினார். இதற்கு எதிராக அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனின் ஆதரவாளர்களான PSG கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அண்ணாமலையை சோசியல் மீடியாக்களில் விமர்சித்து வருகிறார்கள். PSG இல் எம்.எல்.ஏ கோட்டா என்ற ஒன்று எப்போதுமே கிடையாது என்றும், அண்ணாமலைதான் ஓ.பி.சி கோட்டாவில் வந்ததாகவும், அதனை மறைத்துக் கொண்டு அவர் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டும் என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.

கல்லூரிகளில் ஆர்ட்ஸ் vs எஞ்சினியரிங் என்ற சண்டைகள் எப்போதுமே இருந்து வருவது வழக்கம். அதுவும் ஒரே கேம்பசில் எஞ்சினியரிங் மாணவர்களும், ஆர்ட்ஸ் மாணவர்களும் இருந்தால் அங்கு நடக்கும் அக்கப்போர்களை சொல்லவே வேண்டியதில்லை.

இப்போது ஒரு சுவாரசியமான விவகாரமாக ஆர்ட்ஸ்- எஞ்சினியரிங் சண்டை தேர்தல் களத்திற்குள் வந்திருக்கிறது. ஆமாம் கோவை தொகுதியில் தான் இந்த எபிசோட் தொடங்கியிருக்கிறது.

கோவையில் இருக்கும் PSG கல்லூரி தமிழ்நாட்டில் மிகப் பிரபலமான கல்லூரியாகும். இந்த நிறுவனத்தில் ஆர்ட்ஸ், எஞ்சினியரிங், மெடிக்கல் மற்றும் தொழில்நுட்பம் என பல துறைகளில் மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த நிறுவனத்திலிருந்து கிட்டத்தட்ட 13,000 ஆர்ட்ஸ் கல்லூரி மாணவர்களும், சுமார் 8,000 எஞ்சினியரிங் மாணவர்களும் ஆண்டுதோறும் வெளிவருகிறார்கள். லட்சக்கணக்கான மாணவர்கள் இக்கல்லூரியின் Alumini களாக இருக்கிறார்கள்.

இப்போது சுவாரசியமான தகவல் என்னவென்றால், கோவை தொகுதியில் களமிறங்கியிருக்கும் திமுக, அதிமுக, பாஜக வேட்பாளர்கள் மூன்று பேருமே PSG கல்லூரியில் படித்தவர்கள்தான். இதன் காரணமாக கல்லூரியின் Aluminiகளாக இருப்பவர்கள் அவர்களின் துறையைச் சார்ந்தவர்களை ஆதரித்து சோசியல் மீடியாவில் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

திமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் கணபதி ராஜ்குமார் PSG கல்லூரியில் ஆர்ட்ஸ் மாணவராக English Literature படித்தவர். அதன்பிறகு அதே கல்லூரியில் ஜர்னலிசத்திற்கு மாறி முதுகலை Mass media communication படித்தார். அதன்பிறகு அங்கேயே Phd-யும் சேர்ந்தார். ’ஜெயலலிதா மாபெரும் ஆளுமையாக உருவெடுத்தது எப்படி’ என்ற தலைப்பில் தன்னுடைய Phdயை அவர் முடித்தார். அதன்பிறகு அதிமுக மேயராக கோவையில் இருந்தபோது இன்னொரு Phdயும் PSG-யிலேயே முடித்தார். PSG-ன் மாணவராக நீண்ட காலம் இருந்து வருகிறார்.

அதிமுக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சிங்கை ராமச்சந்திரன் PSG கல்லூரியில் EEE பிரிவில் பாலிடெக்னிக் படித்தவர். அதன்பிறகு அங்கேயே lateral entry யாக ECE பிரிவில் BE படித்தார். பின்னர் அகமதாபாத் ஐ.ஐ.எம்-க்குச் சென்று எம்.பி.ஏ முடித்திருக்கிறார்.

பாஜக வேட்பாளராக களமிறங்கியிருக்கும் அண்ணாமலை PSG கல்லூரியில் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்தவர். அதன் பிறகு அவர் லக்னோவில் உள்ள ஐ.ஐ.எம் இல் சேர்ந்து எம்.பி.ஏ படித்தார்.

எல்லா கல்லூரிகளிலும் இருப்பது போல் Arts vs Engineering என்பது PSG கல்லூரியின் அலுமினிகளையும் தொற்றிக் கொண்டிருக்கிறது. மூன்று வேட்பாளர்களும் PSG அலுமினிகள் என்பதால் அவர்களிடையே தேர்தல் கொண்டாட்டம் களைகட்டியிருக்கிறது. இந்த வேட்பாளர் போட்டியிலும் ஜெயிக்கப்போவது ஆர்ட்ஸா எஞ்சினியரிங்கா என்று போட்டியில் இறங்கியிருக்கிறார்கள் PSG முன்னாள் மாணவர்கள்.

ஆர்ட்ஸ் அலுமினிகள் தான் பெருங்கூட்டம் என்பதால் அவர்கள் யாரை முன்னிறுத்தி பிரச்சாரம் செய்யப் போகிறார்கள் என்பது பெரும் எதிர்பார்ப்பாக கல்லூரி மாணவர்களிடையே இருந்து வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

மதிமுகவுக்கு பம்பரம்? தேர்தல் ஆணையம் சொன்ன முக்கிய பதில்!

“இனி பாஜக ஆட்சி அமைந்தால் இளைஞர்களுக்கு திருமணம் கூட நடக்காது” : அகிலேஷ் யாதவ்

கோவையில் அண்ணாமலை…கொடுக்கப்போவது என்ன விலை?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share