தமிழகத்தில் செயற்கை மின்வெட்டை ஏற்படுத்தி தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மூன்று நாட்களாக கடுமையான மின்வெட்டு நிலவி வருகிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில் மின்வெட்டு தொடர்பாக நேற்று சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதில் அளித்து பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஒன்றிய தொகுப்பிலிருந்து, தென் மாநிலங்களுக்கு ஒதுக்க வேண்டிய 750 மெகாவாட் மின்சாரம் தடைபட்டது தான் காரணம் என்று கூறியிருந்தார்.
இந்த சூழலில் நேற்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, 30 நாட்களுக்கு இந்தியாவுக்கு தேவையான மின் உற்பத்திக்கு போதுமான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. அப்படியிருக்கும் போது தமிழகத்தில் மட்டும் ஏன் வினோதமாக பவர்கட் ஏற்படுகிறது.
எதற்குமே மத்திய அரசு வேண்டாம் என்று கூறுபவர்கள் இப்போது முண்டியடித்துக்கொண்டு நிலக்கரி தரவில்லை என்று கூறுகின்றனர்.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடந்த 20ஆம் தேதி மொத்தமுள்ள 5 யூனிட்களில் 4 யூனிட் வேலை செய்யவில்லை. அதற்கு காரணமாக, போதுமான அளவு மின் தட்டுப்பாடு ஏற்படவில்லை அதன் காரணமாகத் தான் யூனிட்டுகளில் மின்உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்று மத்திய மின்வாரியத்திற்கு தமிழக அரசின் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 5 நாட்களுக்கு 20ஆம் தேதி நிலவரப்படி நிலக்கரி கையிருப்பு இருந்தும் எதற்காக 4 யூனிட் களில் மின் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டது.
தமிழத்தில் செயற்கையான மின்வெட்டை ஏற்படுத்தி அதன் மூலமாக தனியாரிடம் மின்சாரத்தை கொள்முதல் செய்து லாபம் பார்ப்பது திமுக அரசுக்கு கைவந்த கலை.
2020 மார்ச் முதல் 2022 பிப்ரவரி வரை மட்டும் இரண்டாயிரம் கோடிக்கு மேல் தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
எனவே செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலமாக தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்க அரசியல் ஊழலில் ஈடுபடுகின்றனர். சில சமயங்களில் கிலோ யூனிட்டை 20 ரூபாய்க்கு கொள்முதல் செய்தது எல்லாம் நாம் பார்த்திருப்போம்.
தமிழகத்துக்கு நாள் ஒனறுக்கு 72 ஆயிரம் டன் நிலக்கரி தேவை என்று அமைச்சர் கூறுகிறார். இந்த 72 ஆயிரம் டன் நிலக்கரி தமிழகத்துக்கு எப்போது தேவை என்றால் தமிழகத்தில் இருக்கக்கூடிய 5 மின் உற்பத்தி நிலையங்களும் 85 சதவிகிதம் மின் உற்பத்தி செய்யும் போது தான் தேவைப்படும் ” என்று கூறியுள்ளார்.
**-பிரியா**