கவிமணி விருதுக்கு டிசம்பர் மாதம் 31ஆம் தேதிக்குள் படைப்புகளை அனுப்பலாம் என கல்வித்துறை அறிவித்துள்ளது.
2021-22ஆம் ஆண்டுக்கான பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கையில் குழந்தைகளின் எழுத்து ஆர்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம் 18 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும் மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000 ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் கவிமணி விருது வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சரால் அறிவிக்கப்பட்டது.
இதைச் செயல்படுத்தும் வகையில் பொது நூலக இயக்ககம் இளம் படைப்பாளர்களிடம் இருந்து தமிழில் கட்டுரைகள், சிறுகதைகளை வரவேற்கிறது. இவ்விருதுக்காக தங்களுடைய படைப்புகளை சமர்ப்பிக்க விரும்பும் இளம் படைப்பாளிகள் www.tamilnadupubliclibraries.org என்ற இணையதள முகவரியில் இருந்து சுயவிவர படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை முழுமையாக பூர்த்தி செய்து அடுத்த மாதம் (டிசம்பர்) 31ஆம் தேதிக்குள் தங்களுடைய படைப்புகளுடன் ‘பொது நூலக இயக்ககம், 737/1, அண்ணாசாலை, சென்னை-600002’ என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
மேலும் dpltnservices@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம். இதுதொடர்பான மேலும் விவரங்களுக்கு இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் வே.தினேஷ்குமாரை 99414 33630 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இந்த தகவல் கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**-ராஜ்**
.
