சரியாக 58 ஆண்டுகளுக்கு முன்பு… அதாவது 1968-ம் ஆண்டு. அப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் கிடையாது, இணையம் கிடையாது. அந்த காலகட்டத்தில்தான் மனித இனம் முதன்முறையாகப் பூமியின் சுற்றுவட்டப்பாதையை விட்டு வெளியேறி, நிலவை நோக்கிப் பயணம் செய்தது (அப்போலோ 8).
அதன் பிறகு அரை நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது. பூமியில் எவ்வளவோ மாற்றங்கள்; தொழில்நுட்பப் புரட்சி, அரசியல் மாற்றங்கள். ஆனால், அந்த 3,84,400 கி.மீ தொலைவில் இருக்கும் நிலவு மட்டும் அப்படியே அமைதியாக இருக்கிறது. அந்த அமைதியைக் கலைக்க, இதோ மீண்டும் மனிதர்கள் கிளம்பிவிட்டார்கள்!
நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ (Artemis II) விண்கலம், மனிதர்களைச் சுமந்துகொண்டு நிலவை நோக்கிச் செல்லத் தயாராகிக்கொண்டிருக்கிறது.
ஏன் இது ஸ்பெஷல்? (History in the Making) அப்போலோ திட்டங்களில் சென்றவர்கள் அனைவரும் அமெரிக்கர்கள் மற்றும் வெள்ளையின ஆண்கள் மட்டுமே. ஆனால், இந்த முறை செல்லும் குழு, இன்றைய நவீன உலகின் பன்முகத்தன்மையை (Diversity) பிரதிபலிக்கிறது.
- கிறிஸ்டினா கோச் (Christina Koch): நிலவுக்குச் செல்லும் முதல் பெண் என்ற பெருமையை இவர் பெறுகிறார்.
- விக்டர் குளோவர் (Victor Glover): நிலவுப் பயணத்தை மேற்கொள்ளும் முதல் கறுப்பினத்தவர் (Person of Color).
- ஜெர்மி ஹான்சன் (Jeremy Hansen): இவர் அமெரிக்கர் அல்ல; கனடா நாட்டைச் சேர்ந்தவர். நிலவுக்குச் செல்லும் முதல் அமெரிக்கர் அல்லாத நபர். இவர்களுடன் கமாண்டர் ரீட் வைஸ்மேனும் இணைகிறார்.
நிலவை நாசமாக்கப் போகிறோமா? 1968-ல் அப்போலோ 8 கிளம்புவதற்கு முன்பு, அதன் கமாண்டர் ஃபிராங்க் போர்மனின் மனைவி சூசன், நாசா அதிகாரிகளிடம் ஒரு கேள்வியைக் கேட்டார்: “நீங்கள் நிலவை நாசமாக்கப் போறீங்களா?” (Will you ruin the moon?)
அன்று அந்தக் கேள்விக்கு அர்த்தம் இருந்தது. இன்றும் இருக்கிறது. அன்று வெறும் ஆர்வத்துடன் சென்றோம். இன்று கையில் அதிநவீன கேட்ஜெட்டுகள் (Gadgets), செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் தீர்க்கப்படாத பூமியின் பிரச்சனைகளையும் சுமந்துகொண்டு செல்கிறோம்.
பயணம் எப்படி இருக்கும்? இந்தக் குழு நிலவில் தரையிறங்காது. இவர்கள் நிலவைச் சுற்றி வந்து (Lunar Flyby), ஆய்வு செய்துவிட்டுப் பூமிக்குத் திரும்புவார்கள். இது அடுத்த கட்டமாக மனிதர்கள் நிலவில் குடியேறுவதற்கும், செவ்வாய் கிரகத்திற்குச் (Mars) செல்வதற்கும் போடப்படும் முதல் விதை.
50 வருஷமா நாம் மாறிட்டோம்… ஆனா நிலா மாறல. இப்போ போறவங்க, அங்க புதுசா எதைக் கண்டுப்பிடிக்கப் போறாங்க? பொறுத்திருந்து பார்ப்போம்!
