கோயில் காவலாளி அஜித் குமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட போலீசாருக்கு வரும் ஜூலை 30-ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Arrested police remanded in custody till July30
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் அஜித் குமார் என்ற காவலர் கடந்த மாதம் 28ஆம் தேதி பணியில் இருந்தார். அப்போது கோயிலுக்கு வந்த பெண் நகை காணாமல் போனதாக கொடுத்த புகாரில் தனிப்படை போலீசார் அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக திருப்புவனம் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்தனர். முற்கட்டமாக தனிப்படையைச் சேர்ந்த ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் உள்ள சிபிஐ அதிகாரிகள் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர்.
தொடர்ந்து டிஎஸ்பி மோஹித் குமார் தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் மதுரை அலுவலகத்திற்கு வந்து அஜித்குமார் கொலை வழக்கு குறித்து முதல் கட்ட ஆலோசனையை நடத்தினர். பின்னர் நீதிமன்ற மதுரை கிளைக்குச் சென்று பதிவாளரிடம் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷின் அறிக்கையை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டனர். இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ நேற்று தொடங்கி உள்ளது.
இந்நிலையில் அஜித் குமாரை தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான ஐந்து போலீசாரின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடையும் நிலையில் 5 போலீசாரும் காணொளி வாயிலாக நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது போலீசாரின் நீதிமன்ற காவலை வரும் 30-ம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
