தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை நள்ளிரவு அமலாக்கத்துறை கைது செய்ததற்கு விசிக தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக பேசிய அவர், “ செந்தில் பாலாஜி நள்ளிரவு கைது செய்யப்பட்டு இருக்கிறார். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கின் அடிப்படையில், நீதிமன்றம் பிறப்பித்து இருக்கும் ஆணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாஜகவினர் மற்றும் சங்பரிவார் அமைப்புகளை சேர்ந்தவர்கள் வாதாடுகிறார்கள்.
ஸ்டாலினை அச்சுறுத்தும் முயற்சி
அது உண்மை தான் . அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால் நள்ளிரவு அவர் கைது செய்யப்பட்டிருப்பது சட்டப்பூர்வ நடவடிக்கை இல்லை, இது திட்டமிட்ட அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்தியல் தளத்திலும் , செயல் தளத்திலும் மிக கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகிற திமுக தலைவரும், தமிழக முதல்வர் ஸ்டாலினை அச்சுறுத்தும் முயற்சி தான் இது.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் இது போன்ற நடவடிக்கைகளில் அரசியல் உள் நோக்குடன் ஈடுபட்டு வருகிறது. நீதிமன்றத்தை கூட தங்களின் விருப்பு வெறுப்பு அடிப்படையிலே பயன்படுத்துகிற போக்கு அதிகரித்து இருக்கிறது என்பதை கட்சி சார்பற்ற பல ஜனநாயக சக்திகள், அரசியல் ஆர்வலர்கள் சுட்டிகாட்டி வருகின்றனர். மோடி தலைமையிலான பாஜக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் அரசியல் சார்ந்தே எடுக்கிறது . இது தமிழ்நாட்டில் மட்டுமல்ல தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் மகள் மீது சட்டபடியான நடவடிக்கை என்ற பெயரில் ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தியது பாஜக அரசு.
அதே போல் மணீஷ் சிசோடியா , சஞ்சய் ராவாத் போன்றவர்களை அலைக்கழித்தது. சிவசேனா கட்சியின் ஆட்சியை கவிழ்த்தது இது போன்ற நடவடிக்கைகளை பாஜக செய்தது” என்றார்.
ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட செக்
தொடர்ந்து பேசிய அவர், “மம்தாபானர்ஜியின் உறவினர் நாடாளுமன்ற உறுப்பினர் அபிசேக் பானர்ஜி மீது பாஜக நடவடிக்கை எடுத்தது. இப்படி பாஜகவை எதிர்ப்பவர்களை எல்லாம் அந்த கட்சி அச்சுறுத்துகிறது.
அப்படி தான் இந்த நடவடிக்கையும் இருக்கிறது. இது தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வைக்கப்பட்ட செக். திமுக அமைச்சரவையிலேயே துடிப்பு மிக்க அமைச்சராகவும் ஸ்டாலினுக்கு உற்ற துணையாகவும் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்பதை அனைவரும் அறிவோம்.
விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை கொடுப்போம் என்று சொன்ன பிறகும் நள்ளிரவு கைது செய்து நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.
நம்முன்னால் இருக்கும் சவால்
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தேசிய அரசியலில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகளை ஒருங்கிணைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார். தன்னுடைய பிறந்த நாளிலேயே பாஜக ஆட்சியை அகற்றுவது தான் நம்முன்னால் இருக்கும் சவால் என்று பிரகடனம் செய்தவர் ஸ்டாலின்.
வருகிற 20 ஆம் தேதி திருவாரூரில் எழுப்பப்பட்டிருக்கும் கலைஞர் கோட்டத்தை திறந்து வைக்க ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் பிகார் முதல்வர் நிதிஷ் குமார் வருகிறார். துணை முதல்வர் தேஜஸ்வி வருகிறார். இவர்கள் எல்லாம் பாஜகவை கடுமையாக எதிர்ப்பவர்கள்.
நிதிஷ் குமார் ஜூன் 23 ஆம் தேதி எதிர்கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவை ஆட்சியில் இருந்து அப்புறப்படுத்துவதற்கான செயல்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்ய இருக்கிறார்.
எதிர் கட்சிகளை சிதறடிக்கும் பாஜக
அந்த கூட்டத்தில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினும் பங்கேற்கிறார். இந்த கூட்டத்தை நிதிஷ் குமார் ஒருங்கிணைத்தாலும் இதற்கு அடித்தள மிட்டவர் நம்முடைய முதல்வர் ஸ்டாலின் . இந்த கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த விடக்கூடாது அதை தடுக்க வேண்டும் எதிர் கட்சிகளை ஒருங்கிணைய விடாமல் சிதறடிக்க வேண்டும் என்கிற அடிப்படையில் பாஜக பதற்றத்தில் இருக்கிறது” என்ற திருமாவளவன்,“ அதன் விளைவாகத்தான் அமலாக்கத்துறையை ஏவி விட்டு திமுக அரசுக்கு ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஸ்டாலின் பங்கேற்பார்
இதை எதிர்கொள்ள கூடிய வலிமை தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு உண்டு . இத்தகைய நடவடிக்கைகளால் பாஜக எதிர்ப்பை திமுக கைவிட்டு விடாது. வரும் 23 ஆம் தேதி நிதிஷ்குமார் தலைமையில் பிகார் மாநிலம் பாட்னாவில் நடைபெறும் கூட்டத்தில் ஸ்டாலின் நிச்சயம் பங்கேற்பார். பாஜகவை வீழ்த்த திமுக எடுக்கும் முயற்சிகளுக்கு விசிக துணை நிற்கும்” என்றார் திருமாவளவன்
மு.வா.ஜெகதீஸ் குமார்