பாஜக கூட்டணி தலைவரான தேவநாதன் இன்று (ஆகஸ்ட் 13) நிதி மோசடி புகாரில் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவரது நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி உரிமையாளரும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன் யாதவ், சென்னை மயிலாப்பூரில் இயங்கி வரும் பழமை வாய்ந்த ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத நிதி லிமிடெட்’ என நிதி நிறுவனத்தின் தலைவராகவும் உள்ளார்.
பாஜகவின் தீவிர ஆதரவாளரான இவர் அதிக வட்டி தருவாக கூறி முதலீடு பெற்ற நிலையில், சுமார் ரூ. 525 கோடி வரை நிதி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதன் அடிப்படையில் திருச்சியில் பதுங்கியிருந்த தேவநாதன் யாதவை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர்.
அவரை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வரும் நிலையில் நிதி மோசடியால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று கூறியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அரசையும் கண்டித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம் நிறுவனத் தலைவர் தேவநாதன் யாதவ் தமிழகக் காவல்துறையால் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி அறிந்தேன்.
மயிலாப்பூர் இந்து சாசுவத நிதி நிறுவனத்தில், முதலீடு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழக பாஜக உறுதியாக உள்ளது.
தமிழக அரசு முழுமையான விசாரணை நடத்தி, முதலீட்டாளர்கள் அனைவருக்கும் இதனை உறுதி செய்ய வேண்டும்.
அதே நேரத்தில், திமுக அரசின் சட்டம் ஒழுங்கு மற்றும் நிர்வாகத் தோல்வியைச் சுட்டிக் காட்டும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளை அச்சுறுத்தும் முயற்சிகளில் இதுவும் ஒன்று என்றால், அதனை வன்மையாகக் கண்டிக்கிறேன்” என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
24,700 பேருக்கு வேலை: தமிழக அமைச்சரவை ஒப்புதல் தந்த மெகா திட்டங்கள்!
தேசிய அளவில் ’ஐஐடி மெட்ராஸ்’ முதலிடத்தில் நீடிப்பது எப்படி?: இயக்குநர் காமகோடி விளக்கம்!