ஓய்வுபெற உள்ள இந்திய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் இன்று (டிசம்பர் 26) குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராட்டங்கள் பற்றி கருத்து தெரிவித்துள்ளதற்கு, அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இன்று காலை டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத்,
“தலைவர்கள் என்றால் பொருத்தமற்ற திசையில் மக்களை வழிநடத்துபவர்கள் அல்ல. ஏராளமான பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள் வன்முறைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். தலைவர்கள் என்பவர்கள் தங்களைப் பின் தொடர்பவர்களுக்கு சரியான வழியைக் காட்ட வேண்டும். கூட்டங்களையும் வழிநடத்துகிறார்கள். இது தலைமை அல்ல. தவறான வழிகாட்டுவது அல்ல தலைமை என்று ராவத் கூறினார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கிலும் மாணவர்கள் போராட்டம் நடத்திவரும் நிலையில் தலைமை ராணுவத் தளபதியின் இந்த கருத்து அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.
ஹைதராபாத் எம்.பியும், ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவருமான அசாசுதீன் ஓவைசி, ராணுவத் தளபதியின் கருத்தை விமர்சித்துள்ளார்.
“அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது அரசியலமைப்பு மக்களுக்கு வழங்கியிருக்கும் உரிமை. இவை அனைத்தும் பொதுமக்கள் விஷயங்கள். இதுபோன்ற அறிக்கைகளை வெளியிடுவதன் மூலம் ராணுவத் தளபதி அரசாங்கத்தை குறைத்து மதிப்பிடுகிறார். அவர் மத்திய அரசாங்கத்தின் மீது விரல் காட்டுகிறார். வன்முறை நடந்தால், அதைத் தடுக்க காவல்துறை, துணை ராணுவப் படைகள் உள்ளன. இராணுவம் அல்ல. பொதுமக்கள் விஷயங்களில் ராணுவத் தளபதி ஏன் தலையிடுகிறார்?
நமது பிரதமர் மோடி தான் மாணவராக இருந்தபோது அவசரகாலத்தில் போராட்டங்களில் பங்கேற்றதாக தனது இணையதளத்தில் எழுதியிருக்கிறார். இராணுவத் தளபதியின் கூற்றுப்படி மோடி செய்ததும் தவறு ”என்று ஹைதராபாத் எம்.பி கூறியிருக்கிறார்..
ராணுவத் தளபதி ராவத்தின் பேச்சு இந்திய ஜனநாயக அரசியல் அமைப்புக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
“இன்று அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசுவதற்கு ராணுவத் தளபதியை அனுமதித்தால், அது நாளை அரசை ராணுவம் கையகப்படுத்த முயற்சிக்கவும் அனுமதிக்கிறது”- என்று காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் பிரிஜேஷ் கலாப்பா ட்விட் செய்திருக்கிறார்.
காங்கிரஸின் இன்னொரு செய்தித் தொடர்பாளர் மணிஷ் திவாரி, “ராணுவத் தலைவர்கள் எப்போது உள் விவகாரங்களைப் பற்றி கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினார்கள்? இது சிவில்-ராணுவ உறவுகளை குறைத்து மதிப்பிடுவதற்கு வழி வகுக்கிறது. ஆயுதப்படைகள் உள்நாட்டு அரசியலில் கருத்து தெரிவிக்கவோ அல்லது தலையிடவோ இல்லை. இது 1947 ஆம் ஆண்டிற்கு முந்தைய நிலை போல இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், “உங்கள் கருத்தை ஏற்கிறேன் தளபதி அவர்களே.. அதுபோல தங்கள் தொண்டர்களை மத வன்முறைகளுக்கும், இனப் படுகொலைகளுக்கும் பயன்படுத்துபவர்களும் தலைவர்களாக இருக்க கூடாதவர்கள்தான். இதையும் ஒப்புக் கொள்வீர்களா தளபதி” என்று கேட்டுள்ளார்.
மத்திய அமைச்சர் ராமதாஸ் அத்வாலே, “ இந்திய நாட்டின் குடிமகனாக ராணுவத் தளபதிக்கு பேசுவதற்கான உரிமை இருக்கிறது. அவரது கூற்று என்னவென்றால் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்க முடியும், ஆனால் வன்முறையில் ஈடுபடக்கூடாது, சொத்துக்களை அழிக்கக் கூடாது என்பதே” என்று கூறியுள்ளார்.
இந்திய ராணுவச் சட்டத்தின் 21 வது பிரிவின்படி, அரசியல் கேள்வி தொடர்பாக எந்தவொரு விஷயத்தையும் பத்திரிகைகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பேசக் கூடாது என்று இருக்கிறது. இதைக் குறிப்பிட்டு பலர் சமூக தளங்களில் கருத்து வெளியிட்டு வருகிறார்கள்.
தி இந்து ஆங்கிலப் பத்திரிகையின் அரசியல் பிரிவு ஆசிரியர் நிஸ்துலா ஹெப்பார், “ கட்சியில் யாராவது இவருக்கு ஒரு டிக்கெட் வாங்கிக் கொடுங்களேன்” என்று ராணுவத் தலைமை தளபதியைக் குறிப்பிட்டு ட்விட் செய்திருக்கிறார்.
ஓய்வுபெற்ற பிறகு பிபின் ராவத் இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதியாக நியமிக்கப்பட இருக்கிறார் என்ற செய்தி சில நாட்களுக்கு முன் வெளிவந்தது குறிப்பிடத் தக்கது.,”
