அருணாச்சல பிரதேசத்தில் இன்று (அக்டோபர் 21) ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் இருந்து குப்த்காசி நோக்கி தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த அக்டோபர் 18ம் தேதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது.
இதில், ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோன்ற விபத்து கால நெருக்கடியின்போது துரிதமாக செயல்படுவதற்கு வசதியாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் இன்று (அக்டோபர் 21) ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு சியங் மாவட்டம் டியூட்டின் என்ற பகுதியில் இந்திய ராணுவ ஹெலிகாப்டர் இன்று காலை வழக்கமான ரோந்துப் பணியில் மேற்கொண்டிருந்தது.
அந்த ஹெலிகாப்டர் காலை 10.45 மணியளவில் மலைப்பாங்கான பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் திடீரென மலைப்பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் ஹெலிகாப்டர் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் விபத்து நடந்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.
விபத்து நடந்த மலைப்பகுதிக்கு செல்ல சாலை வசதி இல்லாததால் ஹெலிகாப்டர் மூலமும் வனப்பகுதி வழியாகவும் மீட்புக்குழுவினர் விரைந்துள்ளனர். இதில் பயணித்தவர்கள் யார், பாதிப்புகள் என்ன என்பது குறித்த விவரங்கள் எதுவும் இன்னும் வெளியாகவில்லை.
இதே மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் 10ம் தேதி ராணுவத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதுபோல் 2019ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதியும் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று மலை மீது விபத்துக்குள்ளானது. கடந்த 4 நாட்களுக்குள் 2வது முறையாக ஹெலிகாப்டர் விபத்து நடைபெற்றுள்ளது.
ஜெ.பிரகாஷ்
ஸ்டெர்லைட் நிறுவனம் மீது கேள்விகளை அடுக்கும் திருமுருகன் காந்தி
தமிழக மீனவர் மீது துப்பாக்கிச்சூடு: விசாரணைக்கு இந்திய கடற்படை உத்தரவு!
