ஆம்ஸ்ட்ராங் கொலை: நெல்சன் மனைவியிடம் விசாரணை – பின்னணி என்ன?

Published On:

| By Kavi

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பிரபல இயக்குநர் நெல்சன் திலீப்குமார் மனைவியிடம் போலீசார் விசாரணை நடத்தியிருப்பது சினிமா வட்டாரத்தை பரபரப்பாக்கியுள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். பெரம்பூரில் அவர் கட்டிக்கொண்டிருந்த வீட்டின் அருகே கடந்த ஜூலை 5ஆம் தேதி கொலை செய்யப்பட்டார்.

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை கேள்விக்குறியாக்கிய இந்த சம்பவம் குறித்து டிஜிபி அலுவலகம் தீவிரமாக விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் சினிமாவை மிஞ்சும் அளவுக்கு ட்விஸ்ட்டுக்கு மேல் ட்விஸ்ட் நடந்து வருகிறது. அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், ரவுடிகள் என பலதரப்பட்டவர்களும் கைதாகியுள்ளனர்.

இவ்வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் மனைவி  பொற்கொடி நேற்று ஆந்திராவில்  கைது செய்யப்பட்டார். அவரை செப்டம்பர் 2 வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

பாஜக, திமுக, அதிமுக, காங்கிரஸ், தமாக என அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்கள் கைதான நிலையில், தற்போது இந்த வழக்கின் பாதை தமிழ் சினிமா வட்டாரத்துக்குள் நுழைந்திருக்கிறது.

கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஜெய்லர் உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநராக இருக்கும் நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விசாரணை வளையத்துக்குள் வந்துள்ளார்.

இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 20க்கும் மேற்பட்டோர் கைதாகியிருக்கும் நிலையில், இந்த சதித்திட்டத்தை தீட்டிய குழுவில் இடம்பெற்றிருந்ததாக கூறப்படும் ரவுடி சம்பவ செந்தில், அவரது  கூட்டாளி மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சம்பவ செந்தில் செல்போன் எண்ணை சுவிட் ஆஃப் செய்து வைத்துவிட்டு, வெவ்வேறு சிம்களில் இருந்து சென்னையில் இருக்கும் தனது ஆட்களுக்கு தொடர்பு கொண்டு வருகிறார் என்ற ரகசிய தகவல் போலீசாருக்கு கிடைத்திருக்கிறது.

அந்த அடிப்படையில் சம்பவ செந்தில் யார் யாருடன் பேசியிருக்கிறார், மொட்டை கிருஷ்ணன் யார் யாருடன் பேசியிருக்கிறார்  என்று போலீசார்  விசாரணை நடத்தியிருக்கின்றனர்.

முதற்கட்டமாக சம்பவ செந்திலின் கூட்டாளியான வழக்கறிஞர் மொட்டை கிருஷ்ணனிடம் மோனிஷா பேசியிருப்பது தெரியவந்துள்ளது.

இருவரும் அடிக்கடி போனில் பேசியிருப்பது தெரியவந்த நிலையில் மொட்டை கிருஷ்ணனுக்கு மோனிஷா அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் ஒரு அதிர்ச்சி தகவலும் தெரியவந்திருக்கிறது.

இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் கூறுகையில், “மோனிஷா தன்னிச்சையாக நடக்கக் கூடியவர்.  இவர் மொட்டை கிருஷ்ணனுடன் நட்புடன் இருந்துள்ளார். அவருடன் போனிலும் பேசி வந்துள்ளார். மொட்டை கிருஷ்ணன் மட்டுமல்ல ரவுடி சம்பவ செந்திலுடனும் போனில் பேசியிருக்கிறார். ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதற்கு பிந்தைய தேதியிலும் அவர் பேசியிருக்கிறார்.

இந்த கும்பலோடு இவருக்கு என்ன தொடர்பு என்று நடத்தப்பட்ட விசாரணையில் வழக்கறிஞர் என்ற அடிப்படையில் பேசி வந்ததாக கூறினார். சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு இருப்பது எனக்குத் தெரியாது என்றும் தெரிவித்தார்.

தொடர்ந்து அவரது வங்கி பண பரிவர்த்தனை மற்றும் கான்பிரன்ஸ் கால் ஆகியவற்றை வைத்து விசாரித்து வருகிறோம். இன்னும் ஓரிரு தினங்களில் சம்பவ செந்திலை நெருங்கிவிடுவோம்” என்கின்றனர்.

க்ரைம் சீரிஸில் வரும் த்ரில் கதையை தாண்டியும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பல திருப்பு முனைகளும், பலரது பெயரும் அடிப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

இந்நிலையில் சந்தேகத்திற்குள்ளாகும் அனைவரிடமும் விசாரித்து வருவதாக போலீசார் கூறுகின்றனர்.

சம்பவ செந்திலும், மொட்டை கிருஷ்ணனுனும் பிடிபடும் பட்சத்தில் கொலை திட்டத்தின் முழு விபரமும் தெரியவரும் எனவும் போலீசார் தரப்பில் சொல்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா வணங்காமுடி

கள்ளர் சீரமைப்பு பள்ளி நிர்வாகத்தை மாற்றுவதா? – அதிமுக உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு!

தோனி வரிசையில் யுவராஜ் சிங்… ரெடியாகும் பயோபிக்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share