வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகள் நேற்று (டிசம்பர் 14) இரவோடு இரவாக புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை 5ம் தேதி பெரம்பூரில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இச்சம்பவம் தொடர்பாக பொன்னை பாலு, ஆற்காடு சுரேஷின் மனைவி பொற்கொடி, தோட்டம் சேகரின் மனைவி மலர்க்கொடி, பிரபல ரவுடி நாகேந்திரன் மகன் அஸ்வத்தாமன் உள்ளிட்ட 28 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் ரவுடி திருவேங்கடம் மற்றும் சீசிங் ராஜா போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட 38 பேர் மீதும், செம்பியம் காவல்நிலைய போலீசார் 4,832 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையை எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். தொடர்ந்து என்கவுன்டர் செய்யப்பட்டவர்களை தவிர்த்து எஞ்சிய நபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு மீதான விசாரணையின்போது, ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் கைமாற்றப்பட்டதாக போலீசார் அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், ’நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு எப்படி கொண்டுவரப்பட்டது?’ என்று கேள்வி எழுப்பியதுடன், இது தொடர்பாக தனியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில் நேற்று இரவு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டிருக்கும் பூந்தமல்லி கிளை சிறைக்கு நேற்று மர்ம நபரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
இதனையடுத்து குற்றவாளிகள் 38 பேரையும் இரவோடு இரவோக புழல் மத்திய சிறைக்கு போலீசார் மாற்றினர்.
இதேபோன்று மதுரை, திருச்சி ஆகிய இரண்டு மத்திய சிறைகளுக்கும் நேற்று இரவு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங்க் கொலை குற்றவாளிகள் வைக்கப்பட்டிருந்த பூந்தமல்லி சிறைக்கு மட்டுமின்றி, இரு மத்திய சிறைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து இதன் பின்னால் பெரும் சதித்திட்டம் இருக்குமா என கேள்வி எழுந்துள்ளது.
இதனையடுத்து சிறைகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், மிரட்டல் வந்த குறிப்பிட்ட செல்போன் எண் குறித்த விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
இதற்கிடையே பகுஜன் சமாஜ் மாநில செயலாளர் தியாகராஜனுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஒருபக்கம் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குற்றவாளிகள் வெடிகுண்டு மிரட்டல் காரணமாக அவசர அவசரமாக சிறை மாற்றப்பட்டுள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த தலைவருக்கு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் : எதிர்பார்ப்புகள் என்னென்ன?
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பிரியாணி சமைக்கப் போறீங்களா? இப்படிச் செய்து பாருங்க!