ஆம்ஸ்ட்ராங் வழக்கில் கைது: அதிமுகவில் இருந்து மலர்க்கொடி சேகர் நீக்கம்!

Published On:

| By Selvam

பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலாளர் மலர்க்கொடி சேகர் இன்று (ஜூலை 18) கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

கடந்த ஜூலை 5-ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது வீட்டின் முன்பு ஆம்ஸ்ட்ராங் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலு உள்ளிட்ட 11 பேர் காவல்நிலையத்தில் சரண்டர் ஆனார்கள்.

ADVERTISEMENT

அனைவரையும் கஸ்டடியில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இந்தநிலையில், ஜூலை 14-ஆம் தேதி ரவுடி திருவேங்கடத்தை விசாரணைக்காக மாதவரம் அழைத்துச் சென்றபோது போலீசாரை துப்பாக்கியால் சுட முயன்றதால் என்கவுன்டர் செய்யப்பட்டார். மீதமுள்ள 10 பேரும் போலீஸ் கஸ்டடி முடிந்து பூந்தமல்லி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலாளர் மலர்க்கொடி சேகர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த தமாகா வழக்கறிஞர் அணி நிர்வாகி பிரவீன் என்ற ஹரிகரன்,திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக இலக்கிய அணி துணை அமைப்பாளர் குமரேசனின் மகன் சதீஷ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் நேற்று (ஜூலை 17) கைது செய்தனர்.

ADVERTISEMENT

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள வழக்கறிஞர் அருளுக்கும் மலர்க்கொடிக்கும் லட்சக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்ததாகவும், ஆம்ஸ்ட்ராங் கொலை குறித்த அனைத்து விவரங்களும் மலர்க்கொடிக்கு தெரியும் என்றும் வழக்கறிஞர் அருள் வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதன் அடிப்படையிலேயே மலர்க்கொடி கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில், மலர்க்கொடி சேகரை அதிமுகவில் இருந்து நீக்கி அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கட்சியின் கொள்கை குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில்,  கட்டுப்பாட்டை மீறி களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும்,

தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த, மலர்கொடி சேகர், (திருவல்லிக்கேணி மேற்கு பகுதி இணைச் செயலாளர்) இன்று முதல் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். அதிமுகவினர் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

விடுதலை 2: கொஞ்சம் காதல்… நிறைய ஆக்ஷன்…. கெத்து காட்டும் விஜய் சேதுபதி

வேலைவாய்ப்பு: TNLDA- வில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share