ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக, அதிமுக, தமாகா, திமுகவை அடுத்து காங்கிரஸ் புள்ளியும் இப்போது கைது செய்யப்பட்டிருக்கிறார்.
வேலூர் சிறையில் இருக்கும் பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும், வழக்கறிஞரும், தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸில் நிர்வாகியுமாக இருந்தவருமான அஸ்வத்தாமன் இன்று (ஆகஸ்ட் 7) கைது செய்யப்பட்டதாக போலீஸ் தகவலை வெளியிட்டுள்ளது.
ஆனால் அஸ்வத்தாமனை நேற்று இரவே போலீஸார் நெருங்கி வளைத்துவிட்டனர். கைது தகவலை இன்று வெளியிட்டிருக்கிறார்கள் என்கிறார்கள் போலீஸ் வட்டாரங்களில்.
ஜூலை 26 ஆம் தேதி மின்னம்பலத்தில் ஆம்ஸ்ட்ராங் கொலை… அடுத்து சிக்கப் போகும் அரசியல் புள்ளி ’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
அந்த செய்தியில், “ஆற்காடு சுரேஷ் தம்பி புன்னை பாலு கொடுத்த வாக்குமூலத்தில், ’புழல் சிறையிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு வேலூர் சிறைக்கு மாற்றப்பட்ட ஒரு சிறைக்கைதியின் மகன் பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிட முயற்சித்திருக்கிறார். ஆனால், அவர் போட்டியிடாத அளவுக்கு சட்ட ரீதியான செக் வைத்தார் ஆம்ஸ்ட்ராங்.
அப்போதே கோபப்பட்ட அந்த கைதி, சிறையில் இருக்கும் இன்னொரு ரவுடியிடம், ’நான்லாம் பத்து ரூபாய்க்கே கொலை செஞ்சவன். என் மகன் முன்னேற்றத்திற்கே தடை போட்ருக்கான். நான் அவனைப் பார்த்துக்கிறேன்’ என கோபமாக பேசியுள்ளார்.
அவர்தான் ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய சிறையில் இருந்தபடியே ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்தாரா இல்லையா எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே என்னோட அண்ணன், எங்கள் ஆளுங்க கொலைக்கு ஆம்ஸ்ட்ராங் தரப்புதான் காரணம். அதனால நாங்களும் அந்த ஸ்கெட்சுல சேர்ந்துக்கிட்டோம்’ என்று புன்னை பாலு வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
மேலும், போலீசாரின் விசாரணையில் தொழில்நுட்ப ரீதியாக கால்தம் மற்றும் கால் டீட்டெயில்ஸ் ( சிடிஆர்) எடுத்து விசாரித்ததில், வேலூர் சிறையில் இருக்கும் அந்த கைதி மகனின் செல்போனுக்கு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகியிருக்கும் வழக்கறிஞர் ஹரிஹரன் மற்றும் தலைமறைவாக இருக்கும் சம்பவ செந்தில் ஆகியோர் தொடர்பில் இருந்திருப்பது தெரிய வந்துள்ளது.
சிறையில் உள்ள கைதியின் மகன் போலீஸ் விசாரணைக்குள் வருவார். அதனால் ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிக்குள்ளும் சலசலப்புகள் ஏற்படும்” என்று பெயர் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டிருந்தோம்.
வேலூர் சிறையில் உள்ள பிரபல ரவுடி நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் தான் அந்த அரசியல் புள்ளி. கைதான தகவல் வெளிவந்த நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அஸ்வத்தாமன் கைது குறித்து போலீஸ் வட்டாரங்களில் விசாரித்தோம்.
“கொலைச் சதியில் அஸ்வத்தாமன் தொடர்பை கடுமையாக சந்தேகித்து அஸ்வத்தாமனை சில வாரங்களாகவே போலீஸார் கண்காணித்தனர்.
திருவள்ளூர் பகுதியில் அஸ்வத்தாமனுக்கு நெருக்கமானவர்களான புட்டலூர் ராம்குமார் என்ற காங்கிரஸ் பிரமுகர் உள்ளிட்ட 4 பேரை போலீஸார் சில நாட்களாக பிடித்து விசாரித்தனர்.
அப்போதுதான் அஸ்வத்தாமன் சமீபத்தில் தனது பிறந்தநாளை கொண்டாட மும்பை சென்றது தெரியவந்தது. அஸ்வத்தாமனின் பிறந்தநாளுக்காக அவருக்கு ஐ போன் ஃபேஸ் கால் மூலமாக அவரது நண்பர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அப்போது அஸ்வத்தாமன், ‘நான் ஃபாரின்ல இருக்கேன். சீக்கிரமா வந்து உங்களுக்கெல்லாம் ட்ரீட் தர்றேன்’ என்று சொல்லியிருக்கிறார்.
ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்வதில் அவரது எதிரிகள் பலரும் ஒன்றிணைந்திருக்கிறார்கள். அவர்களில் தற்போது வேலூர் சிறையில் இருக்கும் நாகேந்திரனும் ஒருவர். அவர் உடல் நலம் இல்லாமல் இருப்பதால் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நீதிமன்ற உத்தரவுப்படி அவர் சிகிச்சை பெற்றபோது, விசிட்டர்ஸ் என்ற அடிப்படையில் ஆம்ஸ்ட்ராங்கின் எதிரிகள் நாகேந்திரனை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்புகளில்தான் கொலைச் சதி தீட்டப்பட்டுள்ளது.
இதெல்லாம் அவரது மகனான வழக்கறிஞர் அஸ்வத்தாமனுக்கு தெரிந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், அந்த ஆபரேஷனுக்கு அஸ்வத்தாமனும் தன்னால் ஆன உதவிகளை செய்திருக்கிறார். ஏனென்றால் அஸ்வத்தாமன் பார் கவுன்சில் தேர்தலில் நிற்பதற்கு பெரும் முட்டுக்கட்டை போட்டு வந்தார் ஆம்ஸ்ட்ராங்.
இதெல்லாம் போலீஸாருக்கு தெரிந்துவிட்ட நிலையில் மும்பை சென்றுவிட்டார் அஸ்வத்தாமன். போலீஸ் தனக்கு வேண்டியவர்களை எல்லாம் சுற்றி வளைத்துவிட்ட நிலையில், கைது ஆவோம் என்று தெரிந்துதான் சென்னைக்கே வந்தார். சில நாட்களாக வீட்டிலேயே இருந்தவர் சமூக தளப் பக்கங்களிலும் ஆக்டிவ் ஆக இருந்தார். இந்நிலையில்தான் நேற்று அவரை போலீஸார் கைது செய்திருக்கிறார்கள்
நாகேந்திரனின் மூத்த மகன் அஸ்வத்தாமன் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பில் இருந்தார். இளைய மகனான அஜித் ராஜ் பாஜகவில் மாநில இளைஞரணியில் பொறுப்பில் இருக்கிறார்.
நாகேந்திரனையும், அஸ்வத்தாமனையும் ஆம்ஸ்ட்ராங் கொலையில் சதித் திட்டம் தீட்டியோர் பட்டியலில் சேர்த்திருக்கிறது போலீஸ். மேலும் இந்த சதித் திட்டத்தில் அஸ்வத்தாமனின் சகோதரரான பாஜக நிர்வாகி அஜித் ராஜுக்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் போலீஸ் விசாரித்து வருகிறது” என்கிறார்கள்.
ஆம்ஸ்ட்ராங் கொலையில் களத்தில் செயல்பட்டவர்கள், பணம் அரேஞ்ச் செய்பவர்களை கைது செய்த போலீஸார், இப்போது சதித் திட்டம் தீட்டிய படலம் பற்றிய விசாரணையை தீவிரப்படுத்தியிருக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்: மக்களவையில் ராகுல் வலியுறுத்தல்!
”வினேஷ் போகத் ‘சதி’க்கு பலியாகிவிட்டார்” : முன்னாள் ஒலிம்பிக் பதக்க வீரர் விமர்சனம்!