பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலை இன்று (ஜுலை 19) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி சென்னை பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக மறைந்த கூலிப்படை தலைவன் ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் அனைவருக்கும் 5 நாள் போலீஸ் காவல் வழங்கி எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில், ரவுடி திருவேங்கடம் போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டார்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் வழக்கறிஞர் மலர்கொடி, ஹரிஹரன் மற்றும் சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடையவராக கருதப்படும் பாஜக வட சென்னை மேற்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த சென்னை புளியந்தோப்பை சேர்ந்த அஞ்சலை தலைமறைவானார்.
கொலையாளிகளுக்கு இவர் தான் லட்சக்கணக்கில் பண உதவி செய்ததாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக தமிழக பாஜக தலைமை நேற்று அறிவித்தது.
தொடர்ந்து அஞ்சலை தீவிரமாக தேடப்பட்டு வந்த நிலையில், சென்னை ஓட்டேரியில் பதுங்கியிருந்த அவரை தற்போது போலீசார் கைது செய்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா