”நாளை பள்ளி திறக்க வேண்டி இருப்பதால், ஆம்ஸ்ட்ராங் உடலை கண்ணியமான முறையில் இன்றே அடக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்யக்கோரி அவரது மனைவி பொற்கொடி தாக்கல் செய்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு இன்று (ஜூலை 7) காலை 9 மணிக்கு விசாரணைக்கு வந்தது.
சட்ட விதிகளை மீற முடியாது! – நீதிபதி
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர் சுப்பு தனது வாதத்தில், ”தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலை கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது. அதே போல ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்யவும் அரசு அனுமதிக்க உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
அதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தில், “தேமுதிக அலுவலகம் 27,000 சதுர அடி கொண்ட பரந்த இடம். பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகம் இருக்கும் இடம் மக்கள் நெருக்கடி அதிகமுள்ள இடம். அதனால்தான் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.
அதனைதொடர்ந்து ஹத்ராஸ் சம்பவத்தை சுட்டிக்காட்டிய நீதிபதி பவானி சுப்பராயன், “ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும், சட்ட விதிகளை மீற முடியாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது? தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்து விட்டு, வேறு இடத்தை அடையாளம் கண்டு மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து ஆம்ஸ்ட்ராங் மனைவி தரப்பு கேட்டுக்கொண்டதன் பேரில் வழக்கு மதியம் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
பெரம்பூரில் 7,500 சதுர அடி இடம் உள்ளது!
தொடர்ந்து சரியாக 12 மணிக்கு துவங்கிய வழக்கு விசாரணையில், பொற்கொடி தரப்பில், ”பெரம்பூரில் தங்களது உறவினருக்கு சொந்தமாக 7,500 சதுர அடி இடம் உள்ளது. அங்கு ஆம்ஸ்ட்ராங் உடல் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்று கோரிக்கை முன்வைத்தார்.
திருவள்ளூர் – அரசுக்கு ஆட்சேபனை இல்லை!
அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர், “ஆம்ஸ்ட்ராங் உடலை அடக்கம் செய்ய 200 சதுர அடி நிலம் ஒதுக்க அரசு தயாராக உள்ளது. திருவள்ளூரில் ஒரு ஏக்கர் நிலம் தர ஆம்ஸ்ட்ராங்கின் உறவினர் தயாராக இருக்கிறார். அங்கு மணி மண்டபம் அமைக்கலாம். அரசுக்கு அதில் ஆட்சேபனை இல்லை” என்று தெரிவித்தார்.
பள்ளி திறக்க வேண்டி இருப்பதால்..
இதனையடுத்து நீதிபதி பவானி சுப்பராயன், “தற்போது தேர்வு செய்துள்ள புதிய இடம் தொடர்பாக அரசிடம் தான் புதிய மனு அளிக்க வேண்டும். இப்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்யுங்கள். விண்ணப்பத்தை அரசு பரிசீலித்து உத்தரவு பிறப்பித்த பிறகு மணி மண்டபம் கட்டிக்கொள்ளுங்கள்.
புதிதாக குறிப்பிடும் நிலத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து அரசு ஆராய வேண்டும். நீதிமன்றம் அதிகார எல்லையை தாண்ட முடியாது. அரசு தான் முடிவு செய்ய வேண்டும்
நாங்கள் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல. நாளை பள்ளி திறக்க வேண்டி இருப்பதால், உடலை நீண்ட நேரம் பள்ளியில் வைத்திருக்க முடியாது. இறந்த ஆம்ஸ்ட்ராங் உடல் கண்ணியமான முறையில் இன்றே அடக்கம் செய்யப்பட வேண்டும்.
விஜய்காந்த் உடலை அவரது கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்ய அரசு அனுமதி வழங்கியது. ஆனால் நீங்கள் தற்போது அனுமதி கோரிய விண்ணப்பத்தை மாநகராட்சி நிராகரித்துவிட்டதால் இந்த வழக்கு செல்லாததாகி விட்டது.
ஒதுக்குப்புறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள்!
பெரம்பூரில் மனுதாரர் தெரிவிக்கும் 7,500 சதுர அடி நிலமும் குடியிருப்பு பகுதி தான். அங்கு எப்படி அனுமதி வழங்க முடியும்?
ராஜிவ் காந்தி நினைவிடம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ளது. ஆனால் உடல் தகனம் செய்யப்பட்டது டெல்லியில். அதே போல உடலை அடக்கம் செய்துவிட்டு பிறகு வேறு இடத்தில் மணிமண்டபம் நீங்கள் கட்டலாம்.
எதிர்காலத்தில் மணிமண்டபத்தில் நிகழ்ச்சி நடத்துவதாக இருந்தாலும் இடையூறுகள் இருக்க கூடாது.
குடியிருப்பு பகுதியில் அடக்கம் செய்ய சிலர் ஆட்சேபம் தெரிவிக்கலாம். எனவே ஒதுக்குப்புறமாக விசாலமான இடத்தை தேர்ந்தெடுங்கள். அந்த இடத்திற்கு அரசிடம் அனுமதி பெறலாம்.
அம்பேத்கர் மணி மண்டபம் போல் விசாலமான இடமாக இருக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங்கின் உடல் முன் அமர்ந்து அவர் மனைவி எப்போதும் அழுது கொண்டிருக்க முடியாது. அவர் மீண்டு வர வேண்டும். தற்போது இந்த வழக்கில் நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மாற்று இடம் குறித்து தமிழக அரசிடம் அனுமதி பெற்று பிற்பகல் 2.30க்கு தகவல் தெரிவியுங்கள்” என்று கூறி நீதிபதி பவானி சுப்பராயன் வழக்கை ஒத்தி வைத்தார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
ஆம்ஸ்ட்ராங் படுகொலை… உண்மையான குற்றவாளிகள் எங்கே? : தமிழக அரசுக்கு மாயாவதி கேள்வி!