அரியலூர் – ஈரோடு இடையே புதிய அகல ரயில் பாதை அமைப்பதற்கான செயல்திட்டம் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில், பெரம்பலூர், துறையூர், தாத்தையங்கார்பேட்டை, திருச்செங்கோடு வழியாக ஈரோட்டை இணைக்கும் வகையில், அரியலூர், ஈரோடு இடையே 108 கிமீ தொலைவிற்கான புதிய அகல ரயில்பாதை அமைப்பது தொடர்பான திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து நாமக்கல் மக்களவைத் தொகுதி எம்.பி. மாதேஸ்வரன் எழுப்பிய கே:ள்விக்கு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதில்:
- அரியலூர் – ஈரோடு இடையே திருச்சி, கரூர் வழியாகச் செல்லும் ரயில் வழித்தடம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது
- பெரம்பலூர் வழியாக அரியலூர் – நாமக்கல் இடையே 116 கிமீ தொலைவிற்கு புதிய ரயில் வழித்தடம் அமைப்பதற்கான விரிவான செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது; இதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு கள ஆய்வு நிறைவடைந்துள்ளது.
- இந்தத் திட்டத்திற்கான விரிவான செயல்திட்ட அறிக்கை உறுதி செய்யப்பட்ட பிறகு மாநில அரசு உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசித்த பிறகு ஒப்புதலுக்காக அனுப்பப்படும்
- இத்திட்டம் நித்தி ஆயோக் மற்றும் மத்திய நிதியமைச்சகத்தின் மதிப்பீட்டிற்காக அனுப்பப்படும்
- இத்தகைய நடைமுறைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதால் அவ்வப்போது மாறிவரும் சூழல் காரணமாக இதற்கான காலவரையறையை துல்லியமாக நிர்ணயம் செய்ய இயலாது.
