தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் சுற்றித் திரிந்த அரிசி கொம்பன் யானை இன்று (ஜூன் 5) மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.
கடந்த மாதம் கேரளா மாநிலத்தில் இருந்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட அரிசிகொம்பன் யானை வனத்துறையினரால் தமிழகத்தை ஒட்டிய வனப்பகுதியில் விடப்பட்டது.
தொடர்ந்து மலைகிராமங்களில் சுற்றித்திரிந்த அந்த யானை கடந்த மே 27 ஆம் தேதி தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் நுழைந்தது.
ஊருக்குள் நுழைந்து மக்களை அச்சுறுத்தியது மட்டுமல்லாமல் சாலையோரம் இருந்த வாகனங்களையும் சேதப்படுத்தியது. இதனால் அதனை பிடிக்க தமிழக வனத்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வந்தனர்.
தொடர்ந்து மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டு 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.
ஆனால் வனத்துறையினரின் அடுத்தடுத்த முயற்சிகள் தோல்வியடைந்ததால் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.
மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரம் சண்முகாநதி அணைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்த அரிசி கொம்பனால் தோட்ட வேலைக்கு யாரும் செல்ல வேண்டாம் என்று அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து 24 மணிநேரமும் அரிசிகொம்பன் நடமாட்டத்தை வனத்துறை அதிகாரிகள் கண்காணித்து வந்தனர். அரிசிகொம்பனை வனப்பகுதிக்குள் விரட்ட பொள்ளாச்சி அருகே டாப் சிலிப்பில் இருந்து சுயம்பு என்ற கும்கி யானை அழைத்துவரப்பட்டது.
ஆனால் அரிசிகொம்பன் அடர்ந்த புதருக்குள் சென்றதால் வனப்பகுதிக்குள் விரட்டுவதும் மயக்க ஊசி செலுத்தி பிடிப்பதும் வனத்துறையினருக்கு சவாலாக அமைந்தது.
யானை சமதள பகுதிக்கு வந்தவுடன் மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 7 நாட்களாக தேனி மாவட்டத்தில் சுற்றித் திரிந்த அரிசிகொம்பன் இன்று அதிகாலை 3.30 மணியளவில் 4 மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது.
பிடிபட்ட அரிசிகொம்பனை 3 கும்கி யானைகளின் உதவியோடு லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு வனத்துறையினர் கொண்டு செல்கின்றனர். இதனால் தேனி மாவட்டத்தில் ஒரு வார காலமாக நீடித்து வந்த பதட்டமான சூழல் நீங்கி இயல்பு நிலை திரும்பியுள்ளது.
மோனிஷா
நமது உடல் நலனைப் போன்றுதானே நமது குடியிருப்பையும் பேணி பாதுகாக்க வேண்டும்?
