சென்னை பாரில் ஏற்பட்ட தகராறில் இளம் பெண் கொல்லப்பட்ட வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை கோயம்பேடு அருகே உள்ள தனியார் பாரில் நேற்று இரவு ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுடன் விடுமுறையை பலரும் கொண்டாடினர்.
அப்போது இளம் பெண் யான்சி மற்றும் பாலகுரு ஆகிய இரு தரப்பினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் போக்கு உண்டாகியுள்ளது.
மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதால் சம்பந்தப்பட்ட இருதரப்பினரையும் பாதுகாவலர்கள் வெளியே அனுப்பியுள்ளனர்.
பாரை வீட்டு வெளியே வந்தும் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது யான்சி பாலகுருவின் கார் கண்ணாடி மீது கல்வீசி தாக்கி விட்டு இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டு இருக்கிறார். அவருடன் 17 வயது சிறுமியும் சென்றுள்ளார்.
இந்த சூழலில் ஆத்திரமடைந்த பாலகுரு தரப்பினர், யான்சியின் இரு சக்கர வாகனம் மீது காரை கொண்டு மோதியுள்ளனர்.
இதனால் இரு சக்கர வாகனத்தில் சென்ற யான்சியும் 17 வயது சிறுமியும் தூக்கி வீசப்பட்டனர். இதில் யான்சி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து உயிருக்கு போராடிய அந்த சிறுமியை மீட்டு அக்கம் பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் உயிரிழந்த யான்சி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். பார் உரிமையாளரான பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த சூழலில் காரை ஓட்டி சென்று திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்திய பாலகுரு மற்றும் அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பாலகுருவின் காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
உயிரிழந்த யான்சி விழுப்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்தவர் என்றும் விடுமுறைக்காக தோழியின் அழைப்பின் பேரில் சென்னை சென்றதாகவும் தகவல்கள் வருகின்றன.
21 வயதிற்குள் இருப்பவர்களுக்கு மது கொடுக்க கூடாது என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தசூழலில் சிறுமிகளை யார் பாருக்குள் அனுமதித்தது? தகராறு ஏற்பட்டது எப்படி? என அனைத்து கோணங்களிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
