தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. argument between Thangam Tennarasu and former ministers
இன்று (மார்ச் 26) ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற்றது.
துறை ரீதியான விவாதம் ஒரு பக்கம் நடைபெற்றாலும், ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே சுவாரசியமான மற்றும் காரசாரமான விவாதங்களும் நடைபெறுகின்றன.
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்ததும் எதிரொலித்தது.
முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பேசுகையில், “அதிமுக என்ற கட்சியே, திமுகவில் பொருளாளராக இருந்த எம்.ஜி.ஆர் கணக்கு கேட்டதால்தான் உருவாக்கப்பட்டது. 2026ல் முடிக்க வேண்டியவர்களின் கணக்கை முடித்து புதிய கணக்கை தொடங்குவோம்” என்று கூற,
இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, ” கணக்கு கேட்டு ஆரம்பிக்கப்பட்ட கட்சிதான். ஆனால் இப்போது அதிமுக தப்பு கணக்கு போட்டுவிட்டது… அண்ணாவையும் மதிக்கவில்லை, அதன் பின் கட்சியை உருவாக்கிய தலைவர்களையும் மதிக்கவில்லை” என்று பதிலளித்தார்.
இதற்கு எஸ்.பி வேலுமணி எழுந்து, “எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் எடப்பாடி போட்ட கணக்கு சரியாகத் தான் இருக்கும். எங்களை எல்லாம் ஆளாக்கிய அம்மாவை என்றைக்கும் மறக்க மாட்டோம்.. கூட்டிக் கழித்து பார்த்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும்” என்று கூறினார்.
இதற்கு அமைச்சர் ஐ பெரியசாமி, “அண்ணாவையும் மறந்து விட்டீர்கள், உங்கள் தாயையும் மறந்து விட்டீர்கள்” என்றார்.
இவ்வாறு அமைச்சர்களுக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையே காரசார வாதங்கள் நடந்தன.