விஜய் டிவி அல்லது ஹாட் ஸ்டார் ஒளிபரப்பு உரிமை வாங்குகிற படங்கள்…. விஜய் டிவி சீரியலில் நடித்தவர்கள் நடித்த படங்கள்….. பிக் பாஸ் நிகழ்சியில் முன்பே கலந்து கொண்டவர்கள் நடித்த படங்கள்… அல்லது மேற்சொன்ன அனைவருக்குமோ அல்லது யாரவது ஒருவருக்கோ வேண்டிய ஆட்கள் சம்மந்தப்பட்ட படங்கள் … இவைகளுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே புரமோஷன் நடக்கும்.
படக்குழுவில் நடிகர் நடிகையர், இயக்குனர் இவர்கள் அனைவருமோ அல்லது ஓரிருவரோ அல்லது ஒருவரோ கூட அப்படி வந்து, படத்தைப் பற்றி பேசி, டிரைலர் போட்டு புரமோஷன் செய்து விட்டுப் போவார்கள்.
உண்மையில் இன்று பட விளம்பரத்துக்கு பெரும் தொகை செலவு செய்யும் சூழலில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் விளம்பரம் கிடைப்பது என்பது பெரிய விஷயம்.
இதற்கு (அனேகமாக) பிக் பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளரோ , விஜய் டி வி யோ அல்லது ஹாட் ஸ்டாரா பணம் வாங்குவதில்லை (என்றே தோன்றுகிறது).
ஆனால் அப்படி பிக்பாஸில் விளம்பரம் செய்யப்படும் படங்கள் வெற்றி பெறுகிறதா?
மாஸ்க் படத்துக்காக நடிகர் கவின் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்து பெரிதாக விளம்பரம் செய்து விட்டுப் போனார்.
தவிர பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு ஒரு வேளை விருந்துணவும் கொடுத்தார் இதுக்கே இந்தப் படம் நல்லா ஓடணும் என்று வாழ்த்தினார் பிக் பாஸ் போட்டியாளர் வினோத்.
அதே போல ரிவால்வர் ரீட்டா படத்துக்கு தனி ஆளாக வந்து புரமோஷன் செய்து விட்டுப் போனார் கீர்த்தி சுரேஷ்.
அவரின் அழகை வியந்து நேரடியாகவே பாடினார் வினோத்.
”சந்தடி சாக்குல நூல் விடறாரு ”என்று கீர்த்தி சுரேஷ் சொன்னார்.
ஆனால் இரண்டு படங்களும் திரையரங்கில் பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை.
பிக் பாஸில் ஒரு படம் அறிமுகப்படுத்தப்பட்டாலும் படம் நன்றாக இருந்தால் தான் ஓடுமென்று நிரூபிக்கப்பட்டு இருக்கிறது .
இந்த வாரமும் விஜய் சேதுபதியிடம் போட்டியாளர்கள் மரியாதை இல்லாமல் நடந்து கொள்வது தொடர்ந்தது. இது மக்கள் பார்க்கும் நிகழ்ச்சி என்ற எல்லையை மீறி விஜய் சேதுபதியே டென்ஷனாகும் அளவுக்கு நடந்து கொண்டார் எஃப் ஜே என்ற போட்டியாளர்.
‘யாரோட உறவை துண்டிக்க விரும்பறீங்க ? யாரோட உறவை நீடிக்க விரும்பறீங்க; என்ற கேள்விக்கு.
எல்லோரும் தன்னிடம் சண்டை போட்டு விவாதம் செய்பவரை துண்டிக்கவும் , தான் சொல்வதை அப்படியே ஏற்போரின் உறவை நீடிக்கவும் விரும்புவதாகச் சொல்ல,
விக்கல்ஸ் விக்ரம் மட்டும் மாற்றி, ‘அன்பாக இருப்பவரோடு விளையாடினால் சுவாரசியமாக இருக்காது . சண்டை போடுபவரோடு விளையாடினால்தான் சுவாரஸ்யமாக இருக்கும்’ என்று ,
”சண்டை போடும் பாருவின் உறவை இங்கே நீட்டிக்க விரும்புகிறேன் . அன்பாக இருக்கும் சான்டராவின் உறவை வெளியே போய் பார்த்துக் கொள்கிறேன் .இப்போ இங்கே துண்டித்து வைக்கிறேன் “என்று சொன்னது விஜய் சேதுபதியையே கைதட்ட வைத்தது .
முன்பே எவிக்ஷன் ஆகிப் போன ஆதிரைக்கு. இதுவரை யாருக்கும் கிடைக்காத வாய்ப்பாக மீண்டும் இப்போதே உள்ளே வரும் வாய்ப்பு கிடைத்து இருக்கிறது .
காரணம் தெரியவில்லை.
பாவம் பார்த்தா ? அல்லது சிபாரிசு பார்த்தா ? அல்லது அந்த எவிக்ஷன் சரி இல்லை என்றா? என்பது தெரியவில்லை.
ஆனால் வெளியே போய் எல்லாவற்றையும் பார்த்து விட்டு உள்ளே வந்திருக்கும் ஆதிரையின் ஆட்டம் எப்படி இருக்கும் என்பது….
போகப் போகத் தெரியும். அந்தப் பூவின் வாசம் புரியுமா என்று பார்ப்போம்
— ராஜ திருமகன்
