பெரும்பாலோர் எடையைக் குறைக்கும் முயற்சியில் சட்டென்று டயட் இருக்க தொடங்கி விடுவார்கள். ஆனால், பொருந்தாத உணவு முறைகளைப் பின்பற்றி வேகமாக எடையைக் குறைத்தால் சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படலாம். உடல் எடையைக் குறைத்து அழகாக வேண்டும் என்ற அடிப்படை விருப்பமே இதில் அடிபட்டுப் போகும்.
உடல் பருமனைக் குறைக்க வேண்டுமென்றால், மூன்று இட்லி சாப்பிடும் நீங்கள் இரண்டு இட்லி சாப்பிடலாம். அதை விடுத்து, சாப்பிடுவதைத் தவிர்ப்பது, நீர் மட்டும் அருந்துவது என்று இருந்தால், நிச்சயம் ஆரோக்கியமின்மை வரும். எனவே, தினமும் இரண்டு காய்கறி, பழங்கள், மாவுச்சத்து, புரதச்சத்து, கொழுப்புச்சத்து ஆகியவை கட்டாயம் உங்கள் சாப்பாட்டுத் தட்டில் இருக்க வேண்டும்.
சில டயட்டில் புரதம், கொழுப்பு என ஏதோவொரு சத்தை மட்டும் எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவார்கள். இதனால், உடல் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் சோர்வடைந்து விடுவீர்கள்.

கொழுப்புச்சத்தை அதிகமாக எடுக்க வேண்டிய டயட்டை ஃபாலோ செய்தால், உங்கள் கல்லீரல் பலவீனமாகலாம். பித்தப்பையில் கற்கள் உருவாகலாம். இந்தப் பிரச்சினைகள் ஏற்கெனவே இருந்தால் இந்த டயட் அவற்றை அதிகப்படுத்தி விடலாம்.
சீரான வளர்சிதை மாற்றத்துக்கும் உடல் இயக்கத்துக்கும் கலோரி அவசியம். அவை குறைவாகக் கிடைக்கும்போது, உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நல்ல கொழுப்பிலிருந்து கலோரிகள் எடுத்துக்கொள்ளப்படும். இது மொத்த உடல் இயக்கத்துக்கும் நல்லதல்ல.
சில டயட்களில் கலோரிகளை தவிர்க்கவே அறிவுறுத்துவார்கள். இப்படித் தவிர்க்கும்போது உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சத்துகளும் உபயோகப்படுத்தப்பட்டு, உடலில் ஆற்றல் குறையத் தொடங்கும். இதனால், வளர்சிதை மாற்றம் தாமதமாகி, பிரச்னைகள் ஏற்படும்.
அதனால் டயட் என்றால் என்னவென்று உணர்ந்து அதன்படி செயல்படுங்கள். உங்கள் உடம்பை லவ் பண்ணுங்கள்!