மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் தொடர்பான தரவுகளை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு வழங்கிய தேர்தல் ஆய்வாளர், அதில் பிழை இருப்பதாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 7-ம் தேதி பெங்களூருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய ராகுல் காந்தி, பெங்களூருவின் மகாதேவபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் முறைகேடுகள் நடந்ததாகவும், அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியல் முறைகேடான முறையில் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும் மகாராஷ்டிரா மக்களவை தேர்தலிலும் பல்வேறு வகையில் மோசடி நடந்துள்ளது என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு ஆதாரமாக ராகுல் காந்தி சி.எஸ்.டி.எஸ் என்ற ஆய்வு மையத்தின் தலைவர் சஞ்சய் குமார் வெளியிட்ட புள்ளி விபரங்களையும் வெளியிட்டிருந்தார்.
பீகாரில் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியில் சுமார் 65 லட்சம் பேர் அதிரடியாக நீக்கப்பட்ட நிலையில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் பீகாரில் வாக்காளர் உரிமை யாத்திரை என்ற யாத்திரையில் ராகுல் காந்தி ஈடுபட்டுள்ளார்
தலைமை தேர்தல் ஆணையர் மறுப்பு
இதற்கிடையில் கடந்த ஞாயிறன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ராகுலின் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்தார். மேலும் வாக்கு திருட்டு என்ற வார்த்தையே அரசியலமைப்பிற்கு எதிராக இருப்பதாகவும் சாடினர். ராகுல் காந்தியிடம் ‘வாக்கு திருட்டு‘ குற்றச்சாட்டுகள் தொடர்பாக ஏழு நாட்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் 7 நாட்களுக்குள் அவர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யாவிட்டால் அவரது குற்றச்சாட்டுகள் தவறானவை என அர்த்தம் என்று குறிப்பிட்டார்.
புள்ளி விபரங்களில் பிழை
இந்த விவகாரத்தில் திடீர் திருப்பமாக புள்ளி விபரங்கள் பிழையானவை என சஞ்சீவ் குமார் தெரிவித்துள்ளார். இதுகுறித்த தனது பழைய பதிவுகளையும் நீக்கி விட்டார். மக்களவை தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் தரவுகளை ஒப்பிடும் போது எங்களது ஆய்வுக்குழு ஒரு வரியில் இருந்த தரவுகளை தவறாக படித்து கணக்கிட்டு விட்டனர். தவறு என தெரிந்ததால் அந்த பதிவை நீக்கி விட்டேன். இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து ராகுல் குற்றச்சாட்டுகள் பொய்யானவை என நிரூபணமாக உள்ளதால் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் விளக்கம்
இந்நிலையில் ஓட்டுத்திருட்டை நிரூபிக்க நாங்கள் பல புள்ளி விபரங்களை ஆராய்ந்தோம். சஞ்சய் கொடுத்ததும் அதில் ஒன்று. அவர் சொன்னதை நாங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே எங்கள் குற்றச்சாட்டில் மாற்றம் இல்லை என்று காங்கிரஸ் நிர்வாகி சுஜாதா விளக்கம் கொடுத்துள்ளார்.
