குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் முட்டை என்பது விருப்பமான உணவாக உள்ளது. முட்டையை வேக வைத்தும், ஆம்லெட், ஆப் பாயில் என்று பல வகையில் சமைத்து உண்கின்றனர். வெஜிடேரியன் என்று சொல்லும் சிலர் கூட முட்டை மட்டும் சாப்பிடும் பழக்கம் சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது.
அதேசமயம் முட்டை ருசிக்கு மட்டும் இல்லை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. தினமும் முட்டை எடுத்துக் கொள்வது நமது அன்றாட ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்ய உதவுகிறது. முட்டை உயர் தர புரதத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளது. ஒரு முட்டையில் சுமார் 6-7 கிராம் புரதம் உள்ளது. மேலும் கால்சியம், துத்தநாகம், விட்டமின் டி, ஈ, பி6 உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் உள்ளது. இது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்களை வழங்குகிறது.
ஆனால் பலரும் முட்டை கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்ற அச்சத்தில் அதை தவிர்த்து விடுகின்றனர். நாம் முட்டையை எடுத்து கொள்வதன் காரணமாக உடலில் கொலஸ்ட்ரால் பிரச்சனை அதிகரிக்குமா? இல்லையா என்ற கேள்விக்கு புதிய ஆய்வு முடிவு என்ன சொல்கிறது? என்பதை இங்கு பார்க்கலாம்.
அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் கிளினிக்கல் நியூட்ரிஷன் இதழின் ஜூலை மாத வெளியீட்டில் ஆய்வு முடிவு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த ஆய்வின்போது, 61 ஆரோக்கியமான நபர்கள் மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு ஐந்து வாரங்களுக்கு மூன்று வெவ்வேறு உணவு முறைகளை கொடுக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஒரு பிரிவினருக்கு உயர் கொலஸ்ட்ரால் மற்றும் உயர் நிறைவுற்ற கொழுப்பு (high saturated fat), உணவுகளுடன் வாரத்திற்கு அதிகபட்சம் ஒரு முட்டையும் வழங்கப்பட்டது.
மற்றொரு பிரிவினருக்கு உயர் கொலஸ்ட்ரால், குறைந்த நிறைவுற்ற கொழுப்பு (Low-saturated fat), உணவுகளுடன் ஒரு நாளைக்கு இரண்டு முட்டைகளும் வழங்கப்பட்டது.
மேலும் ஒரு பிரிவினருக்குக் குறைந்த கொலஸ்ட்ரால், உயர் நிறைவுற்ற கொழுப்பு, மற்றும் முட்டைகள் வழங்கப்படவில்லை.
இந்த ஆய்வின் முடிவில் முட்டைகள் இதய ஆரோக்கியத்திற்கான உணவின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று இப்போது பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு ஒரு முட்டை சாப்பிடுவது இதயத்திற்கு பாதுகாப்பானது என்று ஆராய்ச்சி முடிவுகள் காட்டுகிறது.
மேலும் உயர் LDL கொலஸ்ட்ரால் உள்ளவர்களுக்கு, குறிப்பாக familial hypercholesterolemia போன்ற மரபணு நிலைகள் உள்ளவர்களுக்கு, முட்டைகள் LDL அளவை உயர்த்தலாம் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. உயர் கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து முட்டைகளாகக் குறைக்க வேண்டும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அனைவரும் இதய ஆரோக்கியத்திற்காக நிறைவுற்ற கொழுப்பு உட்கொள்ளளவை ஒரு நாளைக்கு 13 கிராமிற்கு மட்டுப்படுத்த வேண்டும் என்று அமெரிக்க இதய சங்கம் பரிந்துரைக்கிறது.
மேலும் நம் உடலில் LDL கொலஸ்ட்ரால் அளவு உயர்த்துவதற்கு வெறும் உணவு மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. குறிப்பாக தைராய்டு குறைபாடு, சிறுநீரக கோளாறுகள் மற்றும் சில மருந்துகளும் LDL அளவை உயர்த்தலாம்.
கொலஸ்ட்ரால் பற்றி கவலைப்படுபவர்கள், முட்டையின் மஞ்சள் கருவில் உள்ள கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்பு காரணமாக, முட்டையின் வெள்ளைப் பகுதியை உட்கொள்ளலாம் என அந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
