ADVERTISEMENT

புறக்கணிக்கப்படுகிறார்களா தேவர்கள்? தீப்பிடிக்கும் தென்காசி திமுக!

Published On:

| By Aara

இந்து சமய அறநிலைத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் கடந்த சில ஆண்டுகளாக நியமிக்கப்படாமல் இருந்த அறங்காவலர்கள் தற்போது நியமிக்கப்பட்டு வருகின்றனர். Tenkasi DMK on fire

இந்த வகையில் தென்காசியில் இருக்கும் பிரபல கோவிலான காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர்கள் மார்ச் நான்காம் தேதி நியமிக்கப்பட்டனர். இந்த நியமனங்கள் தென்காசி மாவட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

தென்காசி காசி விஸ்வநாதர் சுவாமி கோயிலுக்கு புதிய அறங்காவலர்களாக பாவூர்சத்திரம் கல்லூரணி செட்டியூர் கருப்பசாமி கோவில் தெருவைச் சேர்ந்த பண்டாரம் மகன் முருகேசன், கீழ சுரண்டை வடக்குத்தெருவைச் சேர்ந்த பாலதண்டாயுதபாணியின் மனைவி புவிதா, வல்லத்தை சேர்ந்த யாக்கோப்பாண்டியின் மகனும், ஓணம் பீடி அதிபருமான பாலகிருஷ்ணன், தென்காசி மேல மாசி வீதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தியின் மகள் ஷீலாகுமார்,செங்கோட்டை தாலுகா இலத்தூர் சித்ராபுரம் கிருஷ்ணன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கிலி மகன் மூக்கன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டனர்.

இந்த நியமனங்கள் தென்காசி மாவட்டத்தில் சமுதாய ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன.

ADVERTISEMENT

காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர்களில் தேவர் சமுதாயத்தை சேர்ந்த யாரும் இல்லாததால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் இந்த நியமனங்களுக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும், தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரான ஜெயபாலன் பரிந்துரையின் பெயரில் தான் இந்த நியமனங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. நியமனங்களில் சாதிய கண்ணோட்டம் இருக்கிறது என தேவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள் சமூக வலைத்தளங்களிலும் தென்காசி பகுதியில் சுவரொட்டிகளை ஒட்டி எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக தென்காசி அரசியல் வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது,

“தேவர் சமுதாயத்தை அதிமுக புறக்கணித்துவிட்ட வேளையில் டிடிவி அணியும் குறைத்துக் கொண்டார்கள். ஓபிஎஸ் அணியிலும் அவர்களது முக்கியத்துவம் குறைந்துவிட்டது.

இந்நிலையில், தேவர் சமுதாய மக்கள் திமுக மீது நட்பு வைத்திருக்கின்றார்கள். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் திமுக பக்கம் அதிக அளவு திரண்டு வருகின்றனர். இப்படி ஒரு காலகட்டத்தில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலில் தேவர் சமுதாய மக்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளதாக உணர்கிறார்கள்.

அதேபோல் பண்பொழில் திருமலை குமார சாமி திருக்கோவிலில் இரண்டு பேர்
தேவர் சமுதாய மக்கள் இதுவரை அறங்காவலராக இருந்து வந்திருக்கிறார்கள். இந்த முறை அந்தக் கோவிலில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே அறங்காவலராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் தேவர் சமுதாய அமைப்பினர் போராட்ட ஆலோசனைகளிலும் இறங்கி உள்ளனர்.

சட்டமன்ற தேர்தல் நெருங்குகிற இந்த நிலையில் இப்படிப்பட்ட அணுகுமுறை தென்காசியில் திமுகவுக்கு பாதகத்தை தான் ஏற்படுத்தும்.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் தொடர்பு கொண்டு இதுபற்றி தெரிவித்துள்ளார்கள். மாவட்ட செயலாளர்கள் ராஜா, ஜெயபாலன் கொடுத்த பட்டியலை தான் அதிகாரிகள் மூலமாக நியமித்திருக்கிறோம் என அமைச்சர் தரப்பில் கூறியுள்ளனர்.

ஆனால் இங்கே மாவட்ட செயலாளர் தரப்பினரோ, இங்கிருந்து அனுப்பிய பட்டியல் மாறியிருக்கிறது. மேலே இருந்து அறிவிக்கப்பட்ட பட்டியல் இது என்று சொல்லி தன்னை எதிர்ப்பவர்களை சமாளித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் வழியாக தலைமைக்கும் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

மாவட்ட பொறுப்பு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மாவட்ட விவகாரங்களில் தனது உடல்நிலை காரணமாக அவ்வளவு ஆர்வம் காட்டாத நிலையில்… இந்த விவகாரத்தை தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த திமுக பிரமுகர்கள் அமைச்சர் அன்பில் மகேஷ் கவனத்திற்கும் கொண்டு சென்று இருக்கிறார்கள்.

தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் இந்த விவகாரத்தில் தன் மீது அரசியல் நெருக்கடி ஏவப்படுவதாக துணை பொதுச்செயலாளர் கனிமொழியிடம் தெரிவித்திருப்பதாக சொல்கிறார்கள்.

அறங்காவலர் குழு நியமனங்களை மாற்றி அமைக்கவில்லை எனில் திமுக அரசியல் ரீதியாக சில விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்” என்கிறார்கள்.

இதற்கிடையில், மார்ச் 6-ஆம் தேதி தென்காசியில் கனிம வள கொள்ளைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் அதிமுகவினர் இந்த விவகாரத்தை எடுத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ” “சிவகாசி விஸ்வநாதர் கோவில், தென்காசி விஸ்வநாதர் கோவில், வடக்கில் இருக்கும் காசி விஸ்வநாதர் கோவில் இந்த மூன்றும் ஒன்றை ஒன்று தொடர்புடையவை.

நான் சிவகாசிக்காரன். எனவே தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் குழு நியமனம் பற்றி நான் பேசுவது பொருத்தமானதுதான். தென்காசி கோவில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு பராக்கிரம பாண்டியனால் கட்டப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு முன்பு தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனார் இந்த கோவிலின் ராஜகோபுரத்தை கட்டி எழுப்பினார். பராக்கிரம பாண்டியன் மறு உருவமாகவே சிவந்தி ஆதித்தனார் இந்த திருப்பணியை செய்து முடித்தார்.

இப்படிப்பட்ட நிலையில் இங்கே தேவர் சமுதாய மக்கள், நாடார் சமுதாய மக்கள், தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள், மற்றும் பிற சமுதாய மக்கள் அனைவரும் இணக்கமாக வாழ்ந்து வருகிறார்கள்.

இதில் பிரச்சனை ஏற்படுத்தும் விதமாக ஒரு சமுதாயத்தை புறக்கணித்து அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டிருப்பது இந்த ஆட்சி செய்யும் தவறான செயல். இந்த நியமனங்களை ரத்து செய்து புதிய அறங்காவலர்களை நியமிக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

தென்காசி திமுகவை பொறுத்தவரை எப்போதுமே சலசலப்புக்கும் பரபரப்புக்கும் உரிய மாவட்டம். இந்த விவகாரத்தில் திமுக தலைமை உடனடியாக தலையிட வேண்டும் என்கிறார்கள் தென்காசி திமுக தொண்டர்கள். Tenkasi DMK on fire

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share