தனக்கு பிறக்கபோகும் குழந்தை ஆணா பெண்ணா என்று பாலினத்தை வெளியிட்ட யூடியூபர் இர்பான், அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளார்.
யூடியூபர் இர்பானுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடந்த நிலையில், அவரது மனைவி ஆல்யா தற்போது கர்ப்பமாக இருக்கிறார்.
இந்நிலையில் இர்பான் தனது மனைவியுடன் துபாய் சென்று அங்குள்ள மருத்துவமனையில் ஸ்கேன் செய்து, பிறக்கப்போகும் குழந்தையின் பாலினைத்தை வீடியோ மூலம் வெளியிட்டார்.
இந்தியாவில் வயிற்றில் இருக்கும் சிசுவின் பாலினத்தை வெளியிட தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், இர்பான் வீடியோ வெளியிட்டு அறிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுபோன்ற செயலில் ஈடுபடும் நபர்களின் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, மாநில அமலாக்க அலுவலர், மற்றும் மருத்துவம், ஊரக நலப்பணிகள் இயக்குநர், 21.05.2024 அன்று பாலினத் தேர்வை தடை செய்தல் சட்ட விதிகளை மீறியதற்காக இர்பானுக்கு நோட்டீஸ் அனுப்பினர்.
அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களிலிருந்து உடனடியாக நீக்கிட வலையொளி தளத்திற்கும், கணிணி குற்றம் (Cyber Crime)பிரிவிற்கும் கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டது.
கருவின் பாலினம் அறிவதும் அறிவிக்கும் செயலில் ஈடுபடும் நபர்கள் ஸ்கேன் சென்ட்டர்கள், மருத்துவமனைகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தமிழக சுகாதாரத் துறை தெரிவித்தது.
இந்நிலையில் தனது குழந்தை ஆணா? பெண்ணா? என்று வெளியிட்ட வீடியோவை இர்பான் நீக்கினார்.
தொடர்ந்து, தன்னை தொடர்பு கொண்ட அதிகாரிகளிடம் இர்பான் மன்னிப்பு கேட்டதாகவும், மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட இருப்பதாக தெரிவித்ததாகவும் சுகாதாரத் துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா