உலகத்திலேயே மிகப்பெரிய சரக்கு விமானமான ’ஏர்பஸ் பெலுகா’ எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று இரவு சென்னை விமான நிலையம் வந்த நிலையில் இன்று (ஜூலை 25) புறப்பட்டு சென்றது.
நெதர்லாந்து நாட்டை தலைமையிடமாக கொண்டு, ஏர்பஸ் விமானம் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் பயணிகள் விமானம், சரக்கு விமானங்களையும் தயாரித்து வருகிறது.
அந்த வகையில் பெரிய பொருட்களை சரக்கு விமானத்தில் ஏற்றிச் செல்வதற்கு வசதியாக, திமிங்கலம் வடிவில், சூப்பர் டிரான்ஸ்போர்ட்டர் எனும் “பெலுகா” (A300-608ST) என்ற புதிய சரக்கு விமானத்தை, 1995 ஆம் ஆண்டில் ஏர்பஸ் நிறுவனம் தயாரித்து அறிமுகம் செய்தது.
இந்த சரக்கு விமானம் ஓரே நேரத்தில் 47,000 கிலோ, அதாவது 47 டன் எடை சரக்குகளை ஏற்றி செல்லும் திறன் உடையது.
இந்த ரக பெரிய சரக்கு விமானம், நேற்று குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு, இரவு 9:30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தது. ஏர் பஸ் பெலுகா இதுவரை 2வது முறை சென்னை விமான நிலையம் வந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 11 ஆம் தேதி இதே போல் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து, சென்னை விமான நிலையம் வந்து, எரிபொருள் நிரப்பி விட்டு, சென்னையில் இருந்து தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றது.
உலகிலேயே மிகப்பெரிய சரக்கு விமானம், சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது, நமக்கு பெருமை அளிப்பதாக உள்ளது என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஜூலை மாதத்தில் ஏர் பஸ் பெலுகா சென்னை விமான நிலையம் வந்து எரிபொருள் நிரப்பிக் கொண்டு செல்வதால் ஆண்டுதோறும் திமிங்கல வடிவிலான பெலுகா சென்னைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
A Magnificent Whale Takes-Off
The super transporter #AirbusBeluga 3 taking off from #ChennaiAirport after a respite here today (25.07.2023). pic.twitter.com/vEmu7U31Mv
— Chennai (MAA) Airport (@aaichnairport) July 25, 2023
இதனிடையே ஏர் பஸ் பெலுகா சென்னையில் இருந்து புறப்பட்டு சென்ற வீடியோவை சென்னை விமான நிலையம் அதன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
மோனிஷா
பதக்கம் முக்கியமல்ல பங்கேற்புதான் முக்கியம் : மு.க.ஸ்டாலின் பேச்சு!
நெல்லையில் ஆணவக் கொலையா?: காவல்துறை விளக்கம்!