டெபிட் கார்டு இன்றி யுபிஐ மூலம் ஏடிஎம்-ல் பணம் எடுக்கும் வசதி இந்தியாவில் கொண்டு வரப்பட்டுள்ளது.
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது நாட்டில் வேகமாக வளர்ந்து வரும் கட்டண முறையாக இருக்கிறது. பூக்கடை தொடங்கி ஷாப்பிங் மால் வரை யுபிஐ மூலம் கட்டணம் செலுத்தும் வசதி உள்ளது.
இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India – NPCI) தரவுபடி ஆகஸ்ட்டில் ரூ.15,18,456.4 கோடி யுபிஐ மூலம் பணப்பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது.
இப்படி டிஜிட்டல் பேமெண்ட் முறைஅதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் யுபிஐ மூலம் பணம் எடுக்கும் ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஹிட்டாச்சி பேமென்ட் சர்வீசஸ், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (என்பிசிஐ) உடன் இணைந்து ‘நாட்டின் முதல் யுபிஐ-ஏடிஎம்-ஐ ஒயிட் லேபிள் ஏடிஎம் (டபிள்யூஎல்ஏ) ஆக மும்பையில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவை மூலம் டெபிட் அல்லது கிரெடிட் கார்டு இல்லாமல் ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம். இதற்காக உங்களது போன் மட்டும் கையில் இருந்தால் போதுமானது.
யுபிஐ ஏடிஎம்-ல் பணம் எடுப்பது எப்படி?
1.வாடிக்கையாளர் ஏடிஎம்மில் ‘யுபிஐ மூலம் பணம் எடுத்தல் (UPI cash withdrawal)’ என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
2. எவ்வளவு தொகை எடுக்க வேண்டும் என்று உள்ளிட வேண்டும்.
3.தொகையை உள்ளிட்ட பிறகு, ஏடிஎம் திரையில் ஒருமுறை பயன்படுத்தும் டைனமிக் க்யூஆர் குறியீடு தோன்றும்.
4.அந்த க்யூஆர் குறியீட்டை வாடிக்கையாளர் தங்கள் மொபைல் போனில் உள்ள யுபிஐ ஆப் மூலம் ஸ்கேன் செய்ய வேண்டும்.
5.பின்னர் யுபிஐ பாஸ்வேர்ட் எண்ணை உள்ளிட வேண்டும். அது வெற்றி பெற்றதும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பயனர்கள் பணம் பெற முடியும்.
இப்போதைக்கு இது BHIM செயலியில் மட்டுமே இயங்குகிறது. வரும் நாட்களில் அனைத்து யுபிஐ செயலியிலும் இந்த வசதி கொண்டு வந்து, நாடு முழுவதும் செயல்படுத்தப்படவுள்ளது.
UPI ATM: The future of fintech is here! 💪🇮🇳 pic.twitter.com/el9ioH3PNP
— Piyush Goyal (@PiyushGoyal) September 7, 2023
இந்த யுபிஐ ஏடிஎம்-ல் ஒருவர் பணம் எடுப்பதை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அதனை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் தனது ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார்.
பிரியா
பொன்முடி வழக்கு: அடுத்த வாரம் முடிவு!
சனாதனம்: அமைச்சர் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ஒப்புதல்?