மழை, குளிரென பருவநிலை மாறியுள்ளது. உடல் ரீதியான பிரச்சினைகளுக்கான வாய்ப்பும் அதிகரித்துள்ளது. காய்ச்சல், சளி மட்டுமல்லாது இந்த சீதோஷ்ண நிலையில் மாரடைப்புக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதால் இதய நோயாளிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்கள் பொதுநல மருத்துவர்கள். இதுகுறித்து அவர் தரும் விழிப்புணர்வுத் தகவல்கள் இங்கே…
“தங்களுக்கு இதய நோய் இருப்பதை அறிந்தும் அதற்கான கவனம் கொடுக்காமல் இருப்பவர்கள், தங்களுக்கு இதய நோய் உள்ளது என்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியாமல் இருப்பவர்கள் எல்லாம், குளிர்காலங்களில், குறிப்பாக அதிகாலைப் பொழுதில் வெளியே நடமாடுவது, வாக்கிங் செல்வது, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்வது, வழிபாட்டுக்கு முன்பு குளிர்ந்த நீரில் குளிப்பது… அதிலும் குளிரான நீர் நிலைகளில் இறங்கிக் குளிப்பது போன்ற காரியங்களில் அதிகம் ஈடுபடுவதன் மூலம், அவர்களில் பலரும் மாரடைப்புக்கு உள்ளாகின்றனர். இதனால், மாரடைப்பு சார்ந்த மரணங்கள் மற்ற காலங்களைவிட குளிர்காலங்களில் அதிகமாகப் பதிவாகிறது.
இதுமட்டும் அல்லாமல், மூளை ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பும் இந்தப் பருவநிலையில் அதிகமாவதற்கு முக்கியக் காரணம், இதய ரத்த நாள அடைப்பு அல்லது குருதி ஓட்டக் குறைபாடு உள்ளவர்கள் குளிர்ச்சி மிகுந்த காற்று அல்லது நீரில் தன்னை வெளிப்படுத்தும்போது அவர்களது உடல் குளிர்ச்சி அடைகிறது. இத்தகைய குளிர்ச்சி நிலையை, மேற்கூறிய பிரச்சினைகள் உள்ளவர்களின் உடல் எதிர்கொள்ளச் சிரமப்படும். அதனால், உடலை சூடுபடுத்த உடலின் பாகங்கள் முழுவதுக்கும், குறிப்பாக தசைகளுக்கு ரத்தம் பாய்ச்சப்படும். இதற்காக இதயம் கூடுதலாகப் பணிபுரிந்து துடிக்க வேண்டியிருக்கிறது.
அத்தகைய சூழ்நிலையில், இதயத்தின் துடிப்பு விசை மற்றும் வேகம் இரண்டும் ஒருசேரக் கூடும். ஏற்கெனவே பழுதடைந்த இதயத்தை இப்படி அதிகப் பணி செய்யக் கட்டாயப்படுத்தும்போது பளுவை ஏற்க முடியாமல் அது துடிப்பை நிறுத்திவிடுகிறது. அல்லது, தாறுமாறாகத் துடிக்கிறது. இது போன்ற சூழலில் இதயம் திடீரென்று செயலிழக்கலாம். கூடவே, இதய ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். அல்லது, மூளையின் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். இந்த மாதிரியான சூழலில் முறையான, அவசியமான அவசர சிகிச்சை கிடைக்காவிடில்… மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகம்’’ என்கிற மருத்துவர்கள், இந்தச் சூழலை தவிர்ப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.
“குளிர்காலங்களில் முடிந்தவரை வீட்டினுள்ளே, வெதுவெதுப்பான சூழ்நிலையில் இருக்க வேண்டும். வீட்டை விட்டு வெளியே வருவதைத் தவிர்க்க வேண்டும். அதிகாலை நேரங்களில் வாக்கிங் செல்வதைத் தவிர்த்து, மாலை நேரங்களில் குளிர் பெய்யத் தொடங்கும் முன்பே நடைப்பயிற்சியை முடித்துவிடலாம்.
மலை வாசஸ்தலங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளிக்காமல் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது, குளிர்ச்சியான நீர்நிலைகளில் குளிக்காமல் இருப்பது போன்றவற்றை முக்கியமாகக் கருத்தில் கொள்ள வேண்டும். வெதுவெதுப்பான பானங்களைப் பருகுவது, வெதுவெதுப்பாக உணர வைக்கும்.
குளிரிலிருந்து தற்காப்பளிக்கும் வகையிலான ஆடைகளை அணிவதையும் உறுதி செய்யவும். உடலின் பிரச்னைகளுக்கு மருத்துவர் மூலம் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரை, மருந்துகளைத் தவறாமல் உட்கொள்வதுடன், மருத்துவரிடம் முறையான மறுசந்திப்புகளைப் பின்பற்ற வேண்டும்.
இதய நோயின் அறிகுறிகள் ஏற்பட்டாலோ, இதய ரத்த நாள அடைப்பு அறிகுறிகள் ஏற்பட்டாலோ நேரம் கடத்தாமல் உடனே அவசர சிகிச்சைப் பிரிவு உள்ள மருத்துவமனைக்கு விரைந்து செல்லுங்கள்’’ என்று வலியுறுத்துகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : ஜவ்வரிசி கிச்சடி
டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை: வானிலை மையம்!
19 வயது இந்திய அணியில் 13 வயது குட்டீஸ்… யாரப்பா இந்த கில்லி?
சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? – எடப்பாடி பதில்!