ஹெல்த் டிப்ஸ்: விரதம்… இவர்களெல்லாம் தவிர்ப்பதே நல்லது!

Published On:

| By Minnambalam Desk

தமிழ்க் கடவுள் முருகப்பெருமானின் விசேஷ தினமான நாளை (பிப்ரவரி 11) தைப்பூசத்துக்காக நாள் முழுக்க சாப்பிடாமல் விரதம் இருப்பவர்கள் நம்மில் பலருண்டு.

“பொதுவாக, விரதம் இருக்க வேண்டும் என்றால், நல்ல ஆரோக்கியம் கொண்ட ஒருவர் அதிகபட்சம் 8 மணி நேரம் முதல் 16 மணி நேரம் வரை அவரது இயல்பைப் பொறுத்து விரதம் இருக்கலாமே தவிர, அதற்குமேல் உணவருந்தாமல் இருக்கக்கூடாது. விரதம் இருப்பதற்கு என்னதான் பலன்கள் இருந்தாலும் சிலருக்கு அது ஏற்றதல்ல” என்கிறார்கள் குடல்நல மருத்துவர்கள்.

“இரைப்பையில் இருக்கும் அடர் அமிலங்கள் அதிக வீரியமானவை. இந்த அமிலங்கள், நாம் சாப்பிடும் உணவுகளைச் சிதைப்பதற்கு மட்டும் அல்ல; உணவில் இருக்கும் கிருமிகளை அழிப்பதற்கும் பயன்படுகின்றன. Who Should Avoid Fasting?

உணவுடன் இது கலக்கும்போதுதான், உணவுப்பாதையில் பயணம் சுகமாகும். இல்லையெனில், இரைப்பையைத் தாண்டி உணவு பயணிக்கும்போது, அதிக அளவு அமிலத்தன்மையால் மற்ற உறுப்புகள் பாதிக்கப்படும். இந்த நிலையில் உணவை நேரத்துக்குச் சாப்பிடாமல் தவிர்க்கும்போது இரைப்பை பாதிக்கப்படும்.

எனவே, வளரும் குழந்தைகள் விரதம் இருக்கவே கூடாது. அந்த வயதில் அவர்களுக்கு நிறைய கலோரிகள் தேவைப்படும், விரதமிருப்பதன் மூலம் அது தடைபடும். அது அவர்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

கர்ப்பிணிகளும் விரதம் இருக்கக் கூடாது. எதைச் சாப்பிட்டாலும் அசிடிட்டி எனப்படும் அமிலம் எதுக்களிக்கும் பிரச்சினையால் சிலர் பாதிக்கப்பட்டிருப்பார்கள். பாட்டில் பாட்டிலாக செரிமானத்துக்கான ஆன்டாசிட் மருந்துகள் குடிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். இவர்களுக்கும் விரதம் என்பது ஏற்றதல்ல.

ரத்தச் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நீரிழிவு பாதித்தோரும் விரதம் இருக்கவே கூடாது. நீரிழிவு, இதய நோய்கள் உள்ளவர்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி, உணவு விஷயத்தில் புதிய முயற்சிகள் எதையும் செய்யாமலிருப்பதுதான் சரி. குறிப்பாக, நீரிழிவு பாதித்தோருக்கு விருந்தும் கூடாது, விரதமும் கூடாது” என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share