இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தயாரிப்பில் இளைய தளபதி விஜய் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகேந்திர சிங் தோனி தென்னிந்திய திரைப்படங்களை தயாரித்து வெள்ளித்திரைக்கு வரவுள்ளார். தென்னிந்திய திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகர்களான, விஜய், மகேஷ் பாபு, கிச்சா சுதீப், பிரித்விராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களை தயாரிக்க தோனி திட்டமிட்டுள்ளார்.
முன்னதாக நடிகை நயன்தாரா படத்தை தோனி தயாரிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அந்த படம் குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடிகர் விஜயை சந்தித்து தோனி பேசியிருந்த நிலையில், இருவரும் பட தயாரிப்பு தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் தளபதி விஜய் நடிக்கும் 70-வது படத்தை தோனி தயாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் 7 என்பது தோனியின் அதிர்ஷ்ட எண் என்பதால் அவர் நிச்சயமாக விஜயுடன் இணைந்து பணியாற்றுவார் என்று தோனிக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் வட்டாரத்தில், “விஜய் நடிக்கும் படத்தை தோனியின் மனைவி சாக்ஷி சிங் நடத்தி வரும் தோனி எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட உள்ளது.
தற்போது சென்னையில் அலுவலகம் அமைக்கும் பணியில் தயாரிப்பு நிறுவனம் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
முன்னணி இயக்குனர்களிடமிருந்து கதைகளை கேட்டு வருகிறது தயாரிப்பு நிறுவனம். தமிழ் மட்டுமல்லாது மற்ற மொழிகளிலும் கதை கேட்கப்பட்டு வருகிறது.” என்று கூறுகின்றனர்.
நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். தனது 68-வது படத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அட்லி இயக்கத்தில் நடிக்க உள்ளார்.
தோனி தயாரிப்பில் விஜய் நடிக்கும் திரைப்படம் குறித்தான தகவலை விஜய் தரப்பில் இன்னும் உறுதி செய்யவில்லை.
செல்வம்
டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
நேரக் கட்டுப்பாடு : பட்டாசு வியாபாரிகள் கடிதம் அனுப்பி போராட்டம்!