காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
ஒவ்வொரு நாளும் சுமார் 20 கிமீ வரை நடைப்பயணம் செல்லும் வகையில் இந்த பாத யாத்திரை திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 17 ) மாலை அவர் கர்நாடகா காங்கிரஸ் தொண்டர்கள் உடன் உரையாடினார்.
அவர் தொண்டர்களுடன் உரையாடிய வீடியோவை காங்கிரஸ் கட்சி தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
அந்த வீடியோவில் ராகுல் காந்தி முதலில் தொண்டர்களிடம் நலம் விசாரிக்கிறார். அதன் பின்னர் அனைவரும் தொடர்ந்து என்னுடன் நடைப்பயணம் வரத் தயாரா என்று கேட்கிறார்.
அதற்குத் தொண்டர்கள் நிச்சயம் வர தயாராக உள்ளோம் என்று பதில் அளிக்கிறார்கள்.
அப்போது ஒரு தொண்டர், “நீங்கள் நீண்ட நேரம் நடக்கும்போது சில சிக்கல்கள் ஏற்படும். கால்களில் கொப்புளங்கள் ஏற்படுமே” என்று கேட்கிறார்.
அதற்கு ராகுல், “இங்கு எல்லோருக்கும் கொப்புளங்கள் வந்துள்ளதா” என்று கேட்கிறார். அனைவரும் ஆமாம் என்று சொல்லும் போது, அங்கிருந்த பெண் ஒருவர் மட்டும் தனக்குக் கொப்புளங்கள் எதுவும் வரவில்லை என்கிறார். ராகுல் தனக்கும் கொப்புளம் வரவில்லை என்கிறார்.
மொத்தம் 3570 கிமீ திட்டமிடப்பட்டு உள்ள இந்த பாத யாத்திரையில், ராகுல் காந்தி இப்போது 1000 கிமீ நடந்து உள்ளார்.
இந்த பாத யாத்திரையில் அவரது ஃபிட்னஸ் குறித்தே பலரும் பேசி வருகின்றனர்.
நேற்று நடந்த இந்த உரையாடலில் அவர் தொண்டர்களிடம் தங்கள் அனுபவம் குறித்தும் கேட்டறிந்தார்.
அப்போது ஒருவர், தினசரி 15 கிமீ நடந்தாலும் சோர்வடைவதில்லை இதனால் அதிக தூரம் கூட நடக்கலாம் என்று கூறுகிறார்.
அதற்கு ராகுல் காந்தி, “தாராளமாக நடக்கலாம். ஆனால், மதிய நேரத்தில் வரும் அதிக வெப்பத்தில் நடப்பது உடலுக்கு நல்லதல்ல. இதைக் கருத்தில் கொண்டே ஒரு நாளைக்கு அதிகபட்சம் 20 கிமீ நடக்கலாம் என்று திட்டமிட்டு உள்ளோம்” என்று கூறினார்.
அப்போது ஓய்வு நேரத்தில் என்ன செய்வீர்கள் என்று ஒருவர் கேட்கிறார்.
அதற்கு ராகுல், “மாலை 7.30 க்கு பாத யாத்திரை முடிந்த உடன் கொஞ்சம் உடற்பயிற்சி செய்வேன். பிறகு அம்மாவுக்குக் கால் செய்து நலம் விசாரிப்பேன். பின் எனது சகோதரி மற்றும் நண்பர்களை அழைத்து சிறிது நேரம் பேசுவேன்” என்று பதில் அளிக்கிறார்.
அப்போது தொண்டர் ஒருவர், “நீங்கள் எந்த சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துகிறீர்கள்?” என்று கேட்கிறார்.
அதற்கு ராகுல் சட்டென்று எதுவும் யோசிக்காமல், “இல்லை.. நான் சன்ஸ்கிரீன் எதுவும் பயன்படுத்துவதில்லை. சில சன்ஸ்கிரீன்களை அம்மா அனுப்பினார். ஆனால், நான் எதையும் பயன்படுத்தவில்லை” என்று பதில் அளிக்கிறார்.
மேலும் யாத்திரை குறித்துப் பேசிய அவர், “நாம் இப்போது எதிர்க்கட்சியாக இருக்கிறோம். இப்போது நமக்கு மக்களை நேரடியாகக் களத்தில் இறங்கி சந்திப்பதைத் தவிர வேறு ஆப்ஷன் இல்லை” என்றார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
“சாவர்க்கர் ஆங்கிலேயரிடம் பணம் பெற்றார்” – ராகுல் காந்தி
‘அம்மாவ பிடிச்சு ஜெயில போடுங்க’: 3 வயது சிறுவனின் பரபரப்பு புகார்!