தயிர், மோர் இரண்டுமே நமது அன்றாட உணவுமுறையில் அங்கம் வகிக்கும் பொருட்கள். இரண்டில் எதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது?
“தயிராக இருந்தாலும், தயிரிலிருந்து தயாரிக்கப்படும் மோராக இருந்தாலும் இரண்டிலும் சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. குறிப்பாக, உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் (புரோபயாடிக்ஸ்) அதிகம் காணப்படுகின்றன.
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் குறைக்கும் தன்மை இரண்டுக்கும் உண்டு. ஒரு மனிதனுக்கு தினமும் தேவைப்படும் கால்சியம் அளவில் 12 சதவிகிதம் 100 கிராம் தயிர், மோர் எடுத்துக்கொண்டால் கிடைத்துவிடும்.
தயிர், உடலில் சேரும் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைப்பதால், இதய ரத்த நாள நோய்கள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
செரிமானப் பாதையில் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் தன்மை கொண்டது. புரோபயாடிக்ஸ் இருப்பதால் செரிமானத்துக்கு உதவும். ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.
எடை அதிகரிக்க விரும்புபவர்கள், குழந்தைகளுக்கு தயிரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தயிர் சாதமாகச் சாப்பிடும்போது குழந்தைகளுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும், சரும ஆரோக்கியத்துக்கும் உதவும்.
எலும்பு, பற்கள் ஆகியவற்றின் ஆரோக்கியத்துக்கும் சிறந்தது. குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க தயிர் உதவும்.
மோரில், கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால் மெனோபாஸ் சமயங்களில் எலும்பு அடர்த்தி குறைவதைத் தடுக்கும். குறிப்பாக பெண்களுக்கு மெனோபாஸ், மெனோபாஸுக்கு பிந்தைய காலகட்டங்களில் இந்தப் பிரச்னை ஏற்படுவதற்கான சாத்தியங்களைக் குறைக்கும் தன்மை கொண்டது.
பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம் உள்ளது. அதிக அளவு கொழுப்பை குடல் கிரகித்துக்கொள்வதைத் தடுக்கும் தன்மை கொண்டது.
கலோரியின் அளவு குறைவாக உள்ளதாலும், நீர்ச்சத்து அதிகமாக உள்ளதாலும் மோரை அடிக்கடி எடுத்துக்கொள்ளலாம். மோர் உடலை நீர்த்துவத்துடன் வைக்க உதவும்.
தயிரில் கலோரி அதிகம் என்பதால் சர்க்கரை நோயாளிகள், எடை குறைக்க விரும்புபவர்கள் தயிர் எடுப்பதைத் தவிர்த்துவிட்டு மோர் சேர்த்துக்கொள்வது நல்லது.
சர்க்கரை நோயாளிகள் 150 முதல் 200 மில்லி மோர் எடுத்துக்கொள்ளலாம். மிட் மார்னிங் அல்லது மதிய உணவுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம்.
10 முதல் 15 வயதுக் குழந்தைகளுக்கு 100-150 மில்லி மோர் கொடுக்கலாம். சிறுநீரக நோய்கள் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு தண்ணீர் குறைவாக எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உடையவர்கள் தவிர்த்து, பிற முதியோர்கள் 150 மில்லி மோர் எடுத்துக்கொள்ளலாம்.
தயிர்,மோர் என எது எடுத்துக்கொண்டாலும் சிலர் உப்பு அதிகமாகப் போட்டுச் சாப்பிடுவார்கள். நமது அன்றாட பயன்பாட்டில் உப்பு அதிகமாகவே உள்ளது. எனவே, தயிர், மோர் போன்றவற்றில் உப்பு குறைவாகவோ, தவிர்த்துவிட்டோ எடுத்துக்கொள்வது நல்லது” என்கிறார்கள் உணவியல் ஆலோசகர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஈஸி மதுரா பேடா
ரியல் ஷூட்டிங்… கிளம்பும் விஜய்
வரதட்சணை கொடுமை : 3.5 கோடி சீன இளைஞர்கள் பெண் கிடைக்காமல் தவிப்பு!
சிறை வார்டன் ஆய்வகத்தில் சிக்கிய 95 கிலோ போதைப்பொருள்!