நவீன வாழ்க்கையில் பெண்கள் தங்களுடைய அழகுக்காக செயற்கை ரசாயன அழகுப் பொருட்களையே அதிக அளவு பயன்படுத்துகிறார்கள். அழகு சாதனப் பொருட்களில் எந்த அளவுக்கு ரசாயனங்கள் உள்ளன என்று பெரும்பாலும் தெரிவதில்லை.
முக்கியமாக நகத்தை அழகுபடுத்த பயன்படும் நெயில் பாலிஷ் முழுக்க முழுக்க பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ரசாயனம் அதிகம் உள்ளது. இது, ஆரம்பத்தில் அழகாக இருந்தாலும், சில காலங்கள் கழித்து அழகுடன், ஆரோக்கியத்தையும் சீர்கேடு அடையச் செய்துவிடுகிறது.
இந்த நிலையில் இயற்கை நகப்பூச்சை பயன்படுத்துதல் நலம். இயற்கை நகப்பூச்சு என்பது மருதாணிதான். இதை அரைத்து நகங்களில் பூசுவதால் பூஞ்சை போன்ற நோய்க்கிருமிகளில் இருந்து நகங்களையும் விரல்களையும் காப்பாற்றலாம்.
மருதாணியை விரலின் நுனியிலும் நகங்களிலும் வைப்பதால் அதிகப்படியான பித்தத்தைக் குறைக்கும். நகத்தையும் தூய்மையாக வைக்கும். இந்த இயற்கை நகப்பூச்சான மருதாணி நகங்களை வலிமையாக்கும். விரல் நுனிகளுக்கு சக்தியைத் தரும்.
நகச்சுற்று போன்ற நோய்க்கிருமிகளில் இருந்து விரல்களை பாதுகாக்கும். உள்ளங்கை மற்றும் உள்ளங்காலில் வைப்பதால் அதிகப்படியான பித்தம் மற்றும் எரிச்சல் குறையும். மருதாணி வாசம் நல்ல தூக்கத்தையும் உண்டாக்கும். மனதுக்கு சாந்தி அளிக்கும். நகத்தைச் சுற்றி எந்த தோல் வியாதியும் வராமல் பாதுகாக்கும் என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.