இணையதளம் போல, ஏடிஎம் கார்டு போல, மன அழுத்தம் போல நம் வாழ்வில் தவிர்க்க முடியாததாகிவிட்ட பிரியாணி, நம் உடல்நலனில் செலுத்தும் தாக்கம்தான் என்ன…
எப்போது, எப்படி, எந்தளவு பிரியாணி சாப்பிடுவது ஆரோக்கியமானது? உணவியல் ஆலோசகர்களின் விளக்கம் என்ன?
”பிரியாணிக்கு நறுமணமும், சுவையும் சேர்க்க அதிகமான மசாலா பொருட்களைச் சேர்க்கிறோம். இயற்கையான தாவரங்கள், மூலிகைகள் போன்றவை இந்த மசாலாக்களில் அடங்கியுள்ளன.
இதனால் உடலுக்கு பலவிதமான ஆரோக்கிய ரீதியிலான பலன்கள் கிடைக்கின்றன. குறிப்பாக பிரியாணி மசாலாக்களில் அழற்சி எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் (Antioxidants) நிறைந்துள்ளன.
இதனால் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். இந்த மசாலாப் பொருட்களினால் ஜீரண சக்தியும் மேம்படும்.
இப்படிப்பட்ட பிரியாணி மதிய உணவுக்கு மிகவும் சிறந்தது. இரவில் சாப்பிடுவதாக இருந்தால் 7 மணிக்கு முன்பாக (Early dinner) சாப்பிட்டுவிட வேண்டும். சாப்பிட்ட பிரியாணியானது ஜீரணமாவதற்கான வாய்ப்பையும் உடலுக்குக் கொடுக்க வேண்டும். அதன் பிறகே தூங்கச் செல்ல வேண்டும்.
பிரியாணி சாப்பிட்டவுடன் தூங்கச் செல்லக் கூடாது. இரவு தாமதமாகச் சாப்பிடுவது, 10 மணிக்குப் பிறகு சாப்பிடுவது, அதிகாலை 3 மணிக்கு சாப்பிடுவது எல்லாம் உடல்நலனில் மோசமான விளைவை உண்டாக்கும்.
உண்மையில் இரவு 10 மணிக்குப் பிறகான நேரம் என்பது உங்கள் உடலுக்கு ஓய்வு தேவைப்படும் நேரம் என்பதை மறக்க வேண்டாம்.
பிரியாணி சாப்பிடும்போது அதனுடன் சோடா, சர்க்கரை கலந்த பானங்கள், ஐஸ்க்ரீம், இனிப்பு வகைகள், பொரித்த சிக்கன், அல்வா போன்றவற்றை உண்ணக் கூடாது.
ஏற்கெனவே அதிக கலோரியும், கொழுப்பும் கொண்ட உணவு பிரியாணி. அத்துடன் இதுபோன்ற அதிக கலோரி உணவுகளும் சேர்வது நல்லதல்ல. எனவே, பிரியாணியை தயிர் பச்சடி, கத்திரிக்காய் கறியுடன் சேர்த்து சாப்பிடுவதே போதுமானது.
தினமும் பிரியாணி சாப்பிடுவது தவறானது. உடற்பயிற்சி அல்லது உடல்ரீதியான நடவடிக்கைகள் ஏதுமின்றி அடிக்கடி பிரியாணி சாப்பிடுவது ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். உடலின் எடையைக் கூட்டும்.
மேலும், இதயநோய்கள், செரிமானக் கோளாறு, புற்றுநோய் போன்ற அபாயங்களையும் வரவழைக்கலாம்.
அளவோடு பிரியாணி சாப்பிடுங்கள். தகுந்த இடைவெளி விட்டு சாப்பிடுங்கள். முடிந்தால் வீட்டில் செய்து சாப்பிடுங்கள். வெளியிடங்களாக இருந்தால் தரமான உணவகமா என்று பார்த்துச் சாப்பிடுங்கள்.
பிரியாணி சாப்பிடும் நேரம், எதனுடன் சேர்த்துச் சாப்பிடுகிறோம் என்பதில் தெளிவாக இருங்கள். இப்படி ஸ்மார்ட்டாக சமநிலையைக் கையாளும்போதுதான் பிரியாணி என்கிற சுவையான உணவை தொடர்ந்து எப்போதும் கொண்டாட முடியும்.”
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மேட்சை மாற்றிய அந்த கேட்ச்… டி20 உலக கோப்பையை கைப்பற்றிய இந்தியா!
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து … நிதிஷ் குமார் தீர்மானம்!
“மதுவிலக்கு சட்டத்திருத்த மசோதா பயனற்றது” – காரணம் சொல்லும் சசிகலா