50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வந்துள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகளவில் மக்களால் அதிகளவில் பயன்படுத்தப்படும் சமூக ஊடகங்களில் ஒன்றாக வாட்ஸ்அப் செயலி உள்ளது. இதனை உலகம் முழுவதும் சுமார் 200கோடிக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
சமீபகாலமாக வாட்ஸ் அப் செயலி அடிக்கடி ஹேக் செய்யப்பட்ட நிலையில் பின்னர் சரிசெய்யப்பட்டது. இதனால் செயலியை பயன்படுத்தும் பயனர்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
இந்நிலையில் வாட்ஸ்அப் செயலி பயன்படுத்தும் அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா உள்ளிட்ட 84நாடுகளைச் சேர்ந்த 50கோடி பயனர்களின் தரவுகள் ஹேக்கர்களுக்கு விற்கப்பட்டுள்ளதாக சைபர் நியூஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது சமீபகாலத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பெரிய தரவு மீறல்களில் ஒன்று எனவும் அது தெரிவித்துள்ளது.
அறிக்கையின்படி கிட்டத்தட்ட 50கோடி (குறிப்பிட்டு சொல்வதென்றால் 48.7கோடி) வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்த தரவுகள் வாட்ஸ் அப் செயலி மையத்திலிருந்து திருடவில்லை என்று கூறியுள்ள சைபர் நியூஸ்,
பல்வேறு தளங்களில் பதிவு செய்யப்பட்ட விவரங்களின் அடிப்படையில் அலைபேசி எண்கள் சேகரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளது.
எனவே தெரியாத எண்களில் இருந்து வரும் அழைப்புகள் மற்றும் செய்திகளை வாட்ஸ்அப் பயனர்கள் தவிர்க்க வேண்டும் என்றும் சைபர் நியூஸ் அறிவுறுத்தி உள்ளது.
திருடப்பட்ட தரவுத் தொகுப்பில் அமெரிக்காவின் 32 மில்லியன், எகிப்தில் 45 மில்லியன், இத்தாலியில் 35 மில்லியன், சவுதி அரேபியாவில் 29 மில்லியன், பிரான்சில் 20 மில்லியன் மற்றும் துருக்கியில் 20 மில்லியன் தொலைபேசி எண்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
மெட்டாவின் கீழ் செயல்படும் வாட்ஸ் அப் போன்ற சமூக ஊடகங்களுக்கு தரவு மீறல் என்பது புதிது அல்ல.
கடந்த ஆண்டு, 50 கோடிக்கும் அதிகமான ஃபேஸ்புக் பயனர்களின் தகவல்களை ஆன்லைனில் ஒரு லீக்ஸ்டர் இலவசமாக வழங்கியது. கசிந்த தரவுகளில் தொலைபேசி எண்கள் மற்றும் பிற விவரங்கள் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா