சர்க்கரை நோயாளிகள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் ‘லோ சுகர்’ (Low sugar) என்கிற தாழ் சர்க்கரை நிலை.
சர்க்கரை அளவு அதிகமாவது மட்டுமே பிரச்சினை என்று நினைக்கக் கூடாது. லோ சுகர் ஏற்படுவதை உடனடியாகக் கவனிக்காவிட்டால் அதுவும் மருத்துவ அவசர நிலையில் (Medical emergency) கொண்டு சென்றுவிட்டுவிடும். மருத்துவரீதியாக இதை ‘ஹைப்போகிளைசீமியா’ (Hypoglycemia) என்கிறார்கள் நீரிழிவு மருத்துவர்கள்.
அதாவது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு 80 mg அளவுக்கும் கீழே குறைந்தால் அதை தாழ் சர்க்கரை நிலையாகப் புரிந்துகொள்ளலாம். தாழ் சர்க்கரை நிலையின் அறிகுறிகளை உணர்ந்தால் ஒரு டம்ளரில் ஒன்றிரண்டு டீஸ்பூன் சர்க்கரையைக் கலந்து குடித்துவிட்டால் சர்க்கரை அளவு ஏறி நார்மலாகிவிடும்.
பேருந்திலோ, பைக்கிலோ, காரிலோ சென்றுகொண்டிருக்கிறீர்கள். ஆனால், லோ சுகர் அறிகுறிகளை மயக்கமாகவோ படபடப்பாகவோ உணரும்பட்சத்தில், ‘இன்னும் கொஞ்ச நேரம்தானே வீட்டுக்குச் சென்றுவிடலாம்’ என்று காலத்தைத் தள்ளிப் போடக் கூடாது. 5 நிமிடங்களில் எதுவும் நடக்கலாம் என்பதுதான் யதார்த்தம்.
விமான ஓட்டிக்கு லோ சுகர் வந்து விமானம் கீழே விழுந்த வரலாறெல்லாம் உண்டு. எனவே, உயிருக்கே ஆபத்தான நிலைமையைக் கூட லோ சுகர் உண்டாக்கலாம்.
சர்க்கரை அளவு ரத்தத்தில் குறையும்போது நம் உடல் சில அறிகுறிகளைக் காட்டும். கை, கால் நடுக்கம், படபடப்பு ஏற்படும். இதயம் வேகமாகத் துடிப்பதை உணர முடியும். குளித்தது போல் வியர்த்துக் கொட்டும். வாய் குளறும். கண்கள் இருட்டிக் கொண்டு வரும். தெளிவாகப் பேச முடியாது. இதை உணர்ந்து அதற்கேற்றாற்போல் துரிதமாகச் செயல்பட வேண்டும்.
மாத்திரைகள் எடுத்துக் கொள்வது, இன்சுலின் போட்டுக் கொள்வதுடன் சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதன் மூலமே தாழ் சர்க்கரை நிலை வராமல் தவிர்க்க முடியும். மாத்திரை போட்டு விட்டோமே என்று சாப்பிடாமல் இருப்பது அல்லது மாத்திரை சாப்பிட்ட அலட்சியத்தில் தாமதமாகச் சாப்பிடுவது இரண்டுமே தவறு.
மாத்திரையும், இன்சுலினும் தனக்குக் கொடுக்கப்பட்ட வேலையை மட்டுமே செய்யும். நீங்கள் சாப்பிடாமல் பட்டினி கிடப்பதையெல்லாம் மாத்திரை சமன்படுத்தாது. இதேபோல், ‘ஒரு ஸ்வீட் சாப்பிட்டுவிட்டு மாத்திரை போட்டுக் கொள்கிறேன்’ என்றுகூட சிலர் சொல்வார்கள். இதுவும்கூட தாழ் சர்க்கரை நிலைக்கு முக்கியக் காரணம்.
நீரிழிவாளர்களுக்கு விருந்து தவறானது என்பதைப் போலவே விரதமும் தவறானது. சத்தான உணவுமுறை, சரியான நேரத்துக்குச் சாப்பிடுவதே தாழ் சர்க்கரை நிலை வராமல் தவிர்க்க முடியும்.
இதில் விநோதமான ஒரு விஷயம், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்போது ஒருமுறை ஏற்பட்ட அறிகுறியே மீண்டும் உங்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. ஒருமுறை வியர்த்துக் கொட்டினால், அடுத்த முறை லோ சுகர் ஏற்படும்போதும் வியர்த்துக் கொட்டும். ஒருமுறை தலைச்சுற்றல் வந்தால் அடுத்த முறையும் தலைச்சுற்றல் மட்டுமே வருவதற்கான வாய்ப்பு அதிகம் என்கிறார்கள் நீரிழிவு மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: ஹெர்பல் பாஸ்தா
அந்த அளவுக்கா கொடும பண்றாங்க? – அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: ஆதவ் அர்ஜுனாவுக்கு நேர்ந்த கதி… விஜய் ரியாக்ஷன் என்ன?
‘தொடர்ந்து பிச்சை எடுப்பேன்’ – ரூ.7.5 கோடி சொத்து சேர்த்த பிச்சைக்காரர் பேட்டி!