பல வருடங்களாக புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை நிறுத்த முயற்சி செய்தாலும் மீண்டும் அந்தப் பழக்கத்தைத் தொடர ஆரம்பித்துவிடுவார்கள். புகைப்பழக்கத்தை நிறுத்த முடியாதா? இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு? நுரையீரல் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள் சொல்லும் பதில் இதோ…
“புகைப்பழக்கத்தை நிறுத்தச் செய்ய மாத்திரைகள், `நிகோட்டின் ரீப்ளேஸ்மென்ட்’ தெரபி போன்ற பல வழிகள் உள்ளன. ஆனாலும், அதற்கு முன் சம்பந்தப்பட்ட நபர் அந்தப் பழக்கத்தை நிறுத்துவதில் உறுதியாக இருக்க வேண்டும். சிகரெட் பழக்கத்தால் உடலில் எந்தப் பகுதியிலும் புற்றுநோய் வரலாம் என்பதை உணர வேண்டும்.
புற்றுநோய் மட்டுமல்ல, இதயநோய், பக்கவாதம், நுரையீரல் பாதிப்பு உள்பட பல பிரச்னைகளுக்கும் இந்தப் பழக்கம் காரணமாகலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த ஆபத்துகளை உணர்ந்து, புகைப் பழக்கத்தில் இருந்து மீள நினைப்பவர்களுக்கு மாத்திரைகள், சிகிச்சைகள் மூலமும், கவுன்சலிங் மூலமும் உதவலாம்.
இந்தப் பழக்கத்தை நிறுத்த முயன்று அதில் தோல்வியடைந்தால், இனிமேல் அதை நிறுத்தவே முடியாது என்றெல்லாம் அர்த்தமில்லை. மீண்டும் மீண்டும் முயற்சி செய்யலாம்.
மருத்துவரை அணுகினால், அதற்காக மோட்டிவேட் செய்வார்கள். புகைப்பழக்கத்தை நிறுத்தும் தெரபியில் (Smoking cessation therapy) இவர்களுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படும்.
சிகரெட்டில் ஏராளமான, ஆபத்தான கெமிக்கல்கள் உள்ளன. அவற்றில் நிக்கோட்டினும் ஒன்று. அத்தனை கெமிக்கல்களிலும், மீண்டும் மீண்டும் சிகரெட் புகைக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தூண்டுவதும் அடிக்ஷனாக மாற்றுவதும் நிக்கோட்டின்தான்.
இந்த நிலையில், நிக்கோட்டினை மட்டும் உள்ளடக்கிய மாத்திரை அல்லது சூயிங்கம் அல்லது சருமத்தில் ஒட்டிக் கொள்ளும் பேட்ச் போன்றவற்றை மருத்துவர்கள் பரிந் துரைப்போம். நிக்கோட்டின் இருப்பதால் சம்பந்தப்பட்ட நபருக்கு புகை பிடிக்க வேண்டும் என்ற தேடல் இருக்காது. போகப் போக இந்த மருந்தின் அளவு குறைக்கப்படும். மருந்து கொடுக்கப்படும் வேளைகளும் குறையும். ஒருகட்டத்தில் அதை முற்றிலும் நிறுத்திவிடுவோம்.
போதைப் பொருளுக்குப் பழகியவருக்கு திடீரென அதை நிறுத்தும்போது கை, கால் உதறலும் படபடப்பும் ஏற்படும். சிகரெட்டுக்கு அடிமையானவர்களுக்கு இதில் பாதி அளவு பாதிப்பாவது இருக்கும். ‘நாளை முதல் சிகரெட் பிடிக்காதே’ என்று சொன்னால் அவர்களால் அதைச் செய்ய முடியாது. மாத்திரைகள் மற்றும் கவுன்சலிங் உதவியால் மெள்ள மெள்ள அவர்களை மீட்கலாம்.
நிக்கோட்டின் மட்டுமன்றி, வேறு சில மருந்துகளும் இவர்களுக்குப் பரிந்துரைக்கப்படும். மனவியல் சிகிச்சை மருந்துகளான இவற்றுக்கு பக்க விளைவுகள் இருக்கும் என்பதால் மருத்துவ ஆலோசனையோடு மட்டும்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : இமானுவேல் சேகரன் நினைவு நாள் முதல் தெற்காசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் வரை!
கிச்சன் கீர்த்தனா : விரால் மீன் ரோஸ்ட்
வடகிழக்கு பருமழை… அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தல்!
’சத்யம் சுந்தரம்’ ஆக மாறிய கார்த்தியின் மெய்யழகன்!