உடல் பருமன் ஏற்பட்டு, எந்தப் பக்கம் திரும்பினாலும் ஆளுக்கொரு டயட் பெயரை குறிப்பிட்டு, ‘நான் இந்த டயட் இருந்துதான் பத்து கிலோ வெயிட் லாஸ் பண்ணேன்’, ‘அந்த டயட் இருந்துதான் டயாபடீஸை கன்ட்ரோலுக்கு கொண்டு வந்தேன்’, ‘இந்த டயட் இருந்துதான் கொலஸ்ட்ராலை குறைச்சேன்’ என்கிறார்கள்… இதெல்லாம் எல்லோருக்கும் ஏற்றதா? குடல் மற்றும் இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்களின் விளக்கம் இதோ…
“நமது உடலில் பல்லாயிரம் கோடி செல்கள் இருக்கின்றன. எலும்பு மஜ்ஜையில் இருந்து தினமும் பல கோடி செல்கள் உருவாகும். அதுபோல, பில்லியன் கணக்கில் செல்கள் அழியும். இவற்றை நாம் பார்க்கவும் முடியாது, உணரவும் முடியாது. செல்களால் ஆன நமது உடலுக்கு சக்தி தேவை. செல்களுக்கு எளிதில் சக்தி கிடைப்பது, நாம் உண்ணும் உணவில் உள்ள மாவுச்சத்தில் இருந்துதான். செல்களின் கட்டுமானத்துக்கு உதவுவது புரதச்சத்து, செல்களைப் பாதுகாக்கும் உறைதான் கொழுப்புச்சத்து.
இவை எல்லாமே சாதம், காய்கறிகள், பருப்பு நிறைந்த சாம்பார், காய்கறிக் கூட்டு, பொரியல், கீரை, முளைகட்டிய பயறு, மிளகு – சீரகம் கொண்டு தயாரிக்கப்படும் ரசம், மோர் என்று சாப்பிட்டாலே, நம் உடலுக்குத் தேவையான சத்துகள் கிடைத்துவிடும். ஆனால், இன்றைய வாழ்க்கை முறையில் ருசிக்காக சாப்பிட்டுவிட்டு, உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்து, முறையான உடற்பயிற்சியும் உடல் உழைப்பும் இல்லாமல் உடல் பருமன் வந்த பிறகு பலவிதமான டயட் முறைகளைக் கடைப்பிடிக்கிறார்கள். இவை எல்லாமே நம் நாட்டின் தட்பவெப்ப நிலைக்கும் இன்றைய வாழ்க்கை முறைக்கும் ஏற்றவை அல்ல.
நாமெல்லாம் குழந்தைப் பருவத்திலிருந்தே பருப்பு, பால் என்று சாப்பிட்டு பழக்கப்பட்டவர்கள். அந்த நிலையில் ‘டயட்’ என்ற பெயரில், திடீரென்று அரிசி, பருப்பு, பால் இவற்றையெல்லாம் 10 சதவிகிதத்துக்கு குறைவாகத்தான் சாப்பிட வேண்டும் என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. வெளிநாட்டினர் உணவில் இறைச்சி உணவுகளுக்கு அதிக இடம் உண்டு. ஒரு நேர உணவிலேயே மீன், இறைச்சி, இரண்டு வகை காய்கறிகள் சேர்த்துச் சாப்பிடுவார்கள்.
நமக்கு அப்படிச் சாப்பிட்டு பழக்கம் கிடையாது. அதனால்தான், டயட்டை ஆரம்பித்த 10 நாள்களில் ‘காபியில கொஞ்சம் பால் ஊத்திக்கிறேனே’ என்பார்கள் சிலர். ‘மதியம் ஒரேயொரு சப்பாத்தி சாப்பிட்டுக்கிறேன்’, ‘கால் கப் ரைஸ் சாப்பிட்டா தப்பு கிடையாது’, ‘டீ-யில கொஞ்சமா பால் சேர்த்துக்கிட்டா தப்பில்ல’, ‘அரை சர்க்கரை போட்டுக்கலாமே’ என்று டயட்டை மாற்றிக்கொண்டே இருப்பார்கள்.
இதனால் எடை இழப்பு நடக்கவே நடக்காது. சிலர் உடல் பருமனுடன் ரத்த அழுத்தம், நீரிழிவு போன்றவற்றால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். மேலும், கல்லீரல் பலவீனமாக இருந்தாலோ அல்லது பித்தப்பையில் கற்கள் இருந்தாலோ சில டயட் முறைகள் அந்தப் பிரச்னையை இன்னும் அதிகப்படுத்தி விடும், கவனம்.
“உடல் பருமனைக் குறைக்க வேண்டுமென்றால், மூன்று இட்லி சாப்பிடும் நீங்கள் இரண்டு இட்லி சாப்பிடலாம். அந்த ஒரு இட்லிக்கு பதிலாக நம் பசிக்கு ஏற்ப காய்கறிகளையோ, பழங்களையோ எடுத்துக் கொள்ளலாம். அதை விடுத்து, சாப்பிடுவதைத் தவிர்ப்பது, நீர் மட்டும் அருந்துவது என்று இருந்தால், நிச்சயம் ஆரோக்கியமின்மை வரும். உடல் இயக்கத்துக்குத் தேவையான ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் சோர்வடைந்து விடுவீர்கள்.
சீரான வளர்சிதை மாற்றத்துக்கும் உடல் இயக்கத்துக்கும் கலோரி அவசியம். அவை குறைவாகக் கிடைக்கும்போது, உடலில் சேமித்து வைக்கப்பட்டிருக்கும் நல்ல கொழுப்பிலிருந்து கலோரிகள் எடுத்துக்கொள்ளப்படும். இது மொத்த உடல் இயக்கத்துக்கும் நல்லதல்ல. சில டயட்களில் கலோரிகளை தவிர்க்கவே அறிவுறுத்துவார்கள்.
இப்படித் தவிர்க்கும்போது உடலில் சேமித்துவைக்கப்பட்டிருக்கும் அனைத்துச் சத்துகளும் உபயோகப்படுத்தப்பட்டு, உடலில் ஆற்றல் குறையத் தொடங்கும். இதனால், வளர்சிதை மாற்றம் தாமதமாகி, பிரச்னைகள் ஏற்படும்.
எனவே, சாப்பாட்டுத் தட்டில் பாதி அளவுக்குப் பல வண்ணக் காய்கறிகள் மற்றும் பழங்கள் இருக்கட்டும். கால் பங்கு பழுப்பு அரிசி, சிறுதானியங்கள், கோதுமை போன்றவற்றில் செய்த உணவுகள் இடம் பெறட்டும். மீதியுள்ள கால் பகுதி விலங்கு மற்றும் தாவர கொழுப்புகளான சிக்கன், மீன், முட்டை, பருப்பு, பனீர் போன்றவை இருக்கட்டும். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துங்கள். ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி இந்த இரண்டும் எடைக்குறைப்பில் இலக்கை அடைய மட்டுமன்றி, அது நிரந்தரமாக நிலைக்கவும் ஆரோக்கியமாக வாழவும் உதவும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : சீன அதிபர் – பிரதமர் மோடி சந்திப்பு முதல் ‘அமரன்’ ட்ரெய்லர் ரிலீஸ் வரை!
கிச்சன் கீர்த்தனா : மினி பெப்பர் தட்டை