பரபரப்பாக வேலை பார்த்துக்கொண்டிருப்போம். திடீரென தலை சுற்றுவதுபோல உணர்வோம். சில நொடிகளில் சகஜ நிலைக்குத் திரும்புவோம்.
சிலருக்கு இந்தத் திடீர் தலைச்சுற்றல் என்பது அடிக்கடி நிகழ்வாகவும் இருக்கலாம். ‘அது அப்படித்தான்… ஒரு நிமிஷத்துல சரியாயிடும்…’ என அதை அலட்சியமாகக் கடந்து போவார்கள். இப்படி திடீரென தலை சுற்றுவதன் பின்னணியில் என்னவெல்லாம் காரணங்கள் இருக்கும்… அதற்கான தீர்வு என்ன?
திடீர் தலைச்சுற்றலின் பின்னால் பயப்படத் தேவையில்லாத காரணங்களும் இருக்கலாம்… அது ஏதோ ஆபத்தான பிரச்னையின் அறிகுறியாகவும் இருக்கலாம். தலைச்சுற்றலில் பல வகை உண்டு. சிலருக்கு தன்னைச் சுற்றியுள்ள பகுதியே சுழல்வது போல இருக்கும். இதை ‘வெர்டிகோ'( Vertigo) என்கிறார்கள் மருத்துவர்கள்.
நம் காதுகளில் ‘ஹேர் செல்கள்’ (Hair Cells) இருக்கும். இந்த செல்கள்தான் நம் உடலின் பேலன்ஸை தீர்மானிப்பவை. இந்த செல்களில் ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது சிலருக்கு வெர்டிகோ பிரச்சினை வரலாம். இவர்களுக்கு கழுத்தை ஒருபக்கமாகத் திருப்பினாலோ, படுக்கையில் திரும்பிப் படுத்தாலோகூட கடுமையான தலைச்சுற்றல் ஏற்படலாம். அது சில நொடிகள் இருந்துவிட்டு சரியாகிவிடும்.
திடீரென எழுந்து நிற்பது, உடலில் நீர் வறட்சி ஏற்படுவது, ஹீமோகுளோபின் குறையும் ரத்தச்சோகை பிரச்சினை, நீண்ட நேரம் வெயிலில் நிற்பது, நீண்ட நேரம் நிற்பது போன்றவை திடீர் தலைச்சுற்றலுக்கான பொதுவான காரணங்கள். இந்த வகை தலைச்சுற்றல் சில நொடிகள் இருந்துவிட்டு, தானாக சரியாகிவிடும்.
சிலருக்கு திடீரென ஏற்படும் ஸ்ட்ரெஸ், உடல் வலி, பதற்றம் காரணமாகவும் தலை சுற்றலாம். அவர்கள் எடுத்துக்கொள்ளும் சில மருந்துகளின் பக்கவிளைவாகவும் இருக்கலாம். குறிப்பாக ரத்த அழுத்த மருந்துகள் எடுத்துக்கொள்வோருக்கு தலைச்சுற்றல் பாதிப்பு வரலாம்.
பக்கவாதம் காரணமாகவோ, இதயத்துடிப்பில் சீரற்ற தன்மை காரணமாகவோகூட சிலருக்கு திடீரென தலை சுற்றலாம். கழுத்தில் உள்ள ‘கரோட்டிட் வெசல்ஸ்’ (Carotid Vessels ) எனப்படும் ரத்த நாளங்களில் ஏதேனும் அடைப்பு இருந்தாலும் அது தலைச்சுற்றல் அறிகுறியாக வெளிப்படலாம்.
இந்தக் காரணங்கள் உடனடியாக கவனிக்கப்பட வேண்டியவை. இவற்றில் சில காரணங்கள் உயிருக்கே ஆபத்தாகலாம் என்பதால் அலட்சியம் கூடாது. திடீரென தலை சுற்றினால் உங்களுக்கு நீங்களே இவற்றைக் கேட்டுக் கொள்ளுங்கள்…
நான் கடைசியாக எப்போது தண்ணீர் குடித்தேன்… தண்ணீர் குடிக்க மறந்து விட்டேனா…. என் உடலுக்கு இப்போது தண்ணீர் தேவையா?
நான் நன்றாகத் தூங்குகிறேனா….?
எனக்கு எப்போது தலைச்சுற்றல் வந்தது… வெயிலில் நின்றேனா….?
இந்தக் கேள்விகளில் ஒன்றுதான் காரணம் என்றால் தலைச்சுற்றல் குறித்து பயப்பட வேண்டாம். ஆனால் உங்களுக்கு அடிக்கடி தலைச்சுற்றல் வந்தால், அதாவது ஒரே வாரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வந்தால் உடனடியாக மருத்துவரைப் பார்க்க வேண்டியது அவசியம்.
மருத்துவர் தலைச்சுற்றலின் தன்மை குறித்து உங்களிடம் சில கேள்விகளைக் கேட்பார். அறை முழுவதும் சுற்றியது போல இருந்ததா, கண்களை இருட்டிக் கொண்டு வந்ததா என்றெல்லாம் கேட்டு, அது வெர்ட்டிகோவின் அறிகுறியா, வேறு ஏதேனும் பிரச்சினையா என முடிவுக்கு வருவார். உங்கள் வயது, இதயம், மூளை நலம், நீங்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் உங்களுக்கான சிகிச்சையைப் பரிந்துரைப்பார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோடி ஜி நான் தான் நேரு பேசுறேன்…: அப்டேட் குமாரு
டாடா ஸ்பெய்ன் : சென்னை புறப்பட்டார் ஸ்டாலின்
வேட்பாளர்களின் வைட்டமின்… எடப்பாடி வைக்கும் டெஸ்ட்!
ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை ‘ஆட்டமிழக்காமல்’ இருந்த வீரர்கள்!