காதில் கம்மல் அணிவதற்காகப் போடப்படும் துளை பல்வேறு காரணங்களால் சிலருக்குப் பெரிதாகிவிடும். சிலர் அதை அப்படியே விட்டுவிடுவார்கள். காது துளை பெரிதாவது என்பது பரவலாகக் காணப்படும் பிரச்சினை என்கிற நிலையில் இதற்கான தீர்வு என்ன?
“துளையிடும் சமயத்தில் காதின் கீழ்ப்பகுதிகளில் துளையிட்டு கம்மல் அணியும்போது அங்கு தோல் மட்டுமே இருக்கும். ஆனால், காதுகளின் மேல் பகுதியில் துளையிடும்போது அங்கு குருத்தெலும்புகள் (Cartilage) இருக்கும்.
மேல் பகுதிகளில் துளையிடும் சமயத்தில்தான் தொற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு அதிகமுள்ளது. எனவே, காதுகளில் துளையிடும் சமயத்திலேயே காதுகளை சுத்தம் செய்து உரிய பாதுகாப்பு நெறிமுறைகளுடன் துளையிட வேண்டும். இது தொற்று ஏற்படுவதைத் தடுக்கும்.
ஆனால், வயதாக வயதாக காதுகளில் உள்ள தோல் விரிவடைந்து துளை பெரிதாகும். எடை அதிகமான கம்மல்களைத் தொடர்ந்து அணியும்போது காது துளை விரிவடைந்துவிடும்.
காது துளை பெரிதாகாமல் இருக்க எடை அதிகமாக உள்ள கம்மல்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும்.
துளைகள் பெரிதான பிறகு, அதை சரி செய்வதற்கு அறுவை சிகிச்சை செய்வதுதான் சரியான வழி.
காது மடல்களில் எந்தத் துளையை அடைக்க வேண்டுமோ அதை இன்னும் சற்றுப் பெரிதாக்கி, சுற்றியிருக்கும் தோல் அனைத்தையும் இணைத்து, தையல் போடுவதே இந்த அறுவைசிகிச்சையாகும்.
இப்படிச் செய்யும்போது பெரிதாக இருக்கும் துளையை முற்றிலும் அடைக்க முடியும். இரண்டு, மூன்று மாதங்கள் கம்மல் அணியாமல் உரிய முறையில் காயங்களை ஆற விட வேண்டும். அதன் பிறகு, புதிய துளையிட்டு மீண்டும் கம்மல் அணிந்து கொள்ளலாம்.
இந்தச் சிகிச்சை மேற்கொள்ளும்போது தொற்று ஏற்படாமல் இருக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் வழங்கப்படும்.
துளையை முற்றிலும் அடைக்காமல் பெரிய துளையை கொஞ்சம் மட்டும் சிறிதாக்குமாறு சிலர் கேட்பதும் உண்டு. அதுவும் இயலாத காரியமே. இந்த அறுவை சிகிச்சையை முறையான மருத்துவர்களை அணுகி எடுக்க வேண்டும்.
இந்தச் சிகிச்சை முறை இல்லாமல், க்ரீம் மூலம் காது துளைகளை இணைக்கலாம் என்றெல்லாம் பலர் கூறுகின்றனர்.
கம்மல் அணியும் பகுதி என்பது முற்றிலும் தோலால் சூழப்பட்ட இடம் என்பதால் க்ரீம், க்ளூ பயன்படுத்தி எல்லாம் ஒட்ட முடியாது. அது சாத்தியமே இல்லாத சிகிச்சை.
எனவே, பொதுமக்கள் இது போன்ற விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்” என்கிறார்கள் பொதுநல மருத்துவர்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
11.48 லட்சம் மகளிருக்கு நிதி சார்ந்த பயிற்சி அளிக்கும் தமிழக அரசு!
ஹெல்த் டிப்ஸ்: முழங்காலில் வலி… தவிர்க்க சில வழிகள்!
கடலூர் பற்றி அத்துப்படி… நிவாரணக் களத்தில் கலக்கிய ககன் தீப் சிங் பேடி
பியூட்டி டிப்ஸ்: பளிங்கு முகத்தில் பருக்கள்… தடுக்க உதவும் பாரம்பரியம்!