இன்றைய தலைமுறையினர் பலர் ‘உடல் எடையைக் குறைக்கிறேன்’ என்று காலை உணவைத் தவிர்க்கிறார்கள். இன்னும் சிலர் ‘ஆபீஸுக்கு நேரமாச்சு சாப்பிட நேரமில்லை’ என்கிறார்கள்.
“இப்படிக் காலை உணவைத் தவிர்ப்பதால் நமது உடலில் இயல்பாக நடைபெறும் இயக்கத்தில் மாறுதல்களும் அந்த மாறுதல்களால் உண்டாகும் பாதகங்களும் அதிகமாகும்” என்று எச்சரிக்கிறார்கள் குடல் மற்றும் இரைப்பை நோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர்கள்.
“குறிப்பிட்ட நேரத்தில் சுரக்கும் செரிமானச் சுரப்பிகளை உணவு ஆசுவாசப்படுத்தாதபோது, வயிற்றுத் தசைகளில் படர்ந்திருக்கும் மென்படலத்தில் புண்கள் உண்டாகும். மேலும், உணவு எதுக்களித்தல், வயிற்றுவலி, செரிமானத் தொந்தரவுகள் ஏற்படும்.
உடலில் நடக்கும் அனைத்து வளர்சிதை மாற்றங்களிலும் பாதிப்புகள் ஏற்படும். மேலும், காலையில் சாப்பிடாமல் தவிர்க்கும்போது, செயல்படுவதற்குத் தேவைப்படும் சக்தி கிடைக்காது.
உணவின் மூலம் கிடைக்க வேண்டிய அத்தியாவசிய ஊட்டச்சத்துகள் கிடைக்காமல் சோர்வும், மந்தமான நிலையும் நம்மைப் பற்றிக்கொள்ளும்.
உதாரணத்துக்கு… காலை உணவைத் தவிர்ப்பதால் மனதை உற்சாகமாக வைத்துக்கொள்ள உதவும் நம் உடலில் சுரக்கும் ’டோபமைன்’ (Dopamine) மற்றும் செரடோனின் (Serotonin) ஹார்மோன்களின் அளவுகள் குறையும்.
இதன் காரணமாக பிறரிடம் எரிச்சல், நிதானமின்மை போன்ற குறிகுணங்கள் வெளியாகத் தொடங்கும். மேலும், இப்படி உணவைத் தவிர்க்கும்போது, பசியைத் தூண்டக்கூடிய ‘க்ரெலின்’ (Ghrelin) ஹார்மோன் மற்றும் ‘சாப்பிட்டது போதும்’ என்ற உணர்வைக் கொடுக்கக்கூடிய ‘லெப்டின்’ (Leptin) ஹார்மோனின் இயல்பு நிலையிலும் பல மாறுதல்கள் ஏற்படும்.
குறிப்பாக… உணவின் செரிமானத்தின் மூலம் குளுக்கோஸிலிருந்து கிடைக்கும் ஆற்றலை அதிகம் எதிர்பார்ப்பது உடலின் தலைமைச் செயலகமான மூளை.
சாப்பிடாமல் இருப்பதால், குளுக்கோஸ் பற்றாக்குறை ஏற்பட்டு, மூளைக்குத் தேவைப்படும் ஆற்றல் முழுமையாகக் கிடைக்காமல் மறதி அதிகரிக்கும். அறிவாற்றலும் குறையும். செய்யும் வேலையிலும் முழு ஈடுபாடு இருக்காது. இப்படியெல்லாம் சொல்வது பயமுறுத்தல் இல்லை. இதுதான் உண்மை” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வால்நட் கீர்
அது பட்ஜெட் இல்லை : அப்டேட் குமாரு
டிஜிட்டல் திண்ணை: குடைச்சல் கொடுத்தால், கூட்டணியே நோ… தனித்துப் போட்டிக்குத் தயாராகும் ஸ்டாலின்?
‘ஆதி நெருப்பே, ஆறாத நெருப்பே’ : சூர்யாவின் ‘கங்குவா’ பாடல்!