வேலைச் சூழல் அல்லது தவிர்க்க முடியாத காரணத்தால், உரிய நேரத்தில் சாப்பிட முடியாமல் போகலாம். அவ்வாறு காலை உணவை 11 மணி வாக்கிலும், மதிய உணவை 3 – 4 மணி வாக்கிலும், இரவு உணவை 10 – 11 மணி வாக்கிலும் சாப்பிடுபவர்களே அநேகர். அப்படிப்பட்டவர்களில் நீங்களும் ஒருவரா?
“இது தவறான பழக்கம். இவ்வாறு சாப்பிட்டால், செரிமான பாதிப்புகள் ஏற்படும். அடுத்த வேளை உணவை எடுத்துக் கொள்வதிலும் மாறுபாடுகள் வரலாம். நேரம் தவறிச் சாப்பிட்டால் அசிடிட்டி பாதிப்பு வரும்” என்று எச்சரிக்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
மேலும், சாப்பிடும் விஷயத்தில் எது சரி… எதெல்லாம் தவறு என்றும் விளக்குகிறார்கள்.
‘தினமும் 2 – 3 வேளைக்குச் சரியான முறையில் (அன்றாட தேவைக்கான ஊட்டச்சத்துகள் நிறைந்த சரிவிகித உணவுகள்) சாப்பிடுகிறேன். ஆனால், இடைப்பட்ட நேரத்தில் பசி வந்தாலும் வராவிட்டாலும் தண்ணீர் மட்டுமே குடிக்கிறேன். திட, திரவ உணவுகள் எதையும் எடுத்துக் கொள்வதில்லை’ என்பவர்கள் உண்டு. இவர்களின் இந்த உணவுமுறையும் சிறந்ததுதான். எந்தச் சிக்கலும் வராது.
‘எனக்கு எவ்வித உடல்நல பாதிப்புகளும் இல்லை. இருப்பினும், குறைவான அளவில் உணவு எடுத்துக்கொண்டு, பசிக்கு ஏற்ப தினமும் 5 – 6 வேளைக்குச் சாப்பிடுகிறேன்’ என்பவர்களும் இருக்கிறார்கள். இது தவறான வழக்கம். பலமுறை சாப்பிடுவதால், அடிக்கடி இன்சுலின் சுரப்பு நடக்கும். எனவே, இந்த உணவு முறை தவறானது. எவ்வித உடல்நல பாதிப்புகளும் இல்லாதவர்கள், தினமும் 2 – 3 தடவை உணவு உட்கொள்வதே சரியானது.
நீரிழிவு (சர்க்கரை) பாதிப்புள்ளவர்கள் பலரும், சில மணி நேரத்துக்கு ஒருமுறை வீதம் ஒருநாளில் பலமுறை உணவு சாப்பிடுவார்கள். இரண்டு இட்லி, சிறிதளவு சாப்பாடு, காய்கறி, ஓரிரு தோசை என ஒவ்வொரு தடவையும் பிரித்துப் பிரித்துச் சாப்பிடுவார்கள். இவ்வாறு பலமுறை பிரித்துச் சாப்பிட்டாலும், அவர்கள் சராசரியாக மூன்று வேளைக்கு மட்டுமே மருந்து, மாத்திரைகளை எடுத்துக்கொள்வார்கள்.
எனவே, மருந்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நேரம் மற்றும் அளவுடன், சாப்பிடும் நேரமும் அளவும் மாறுபடுவதால், உணவும் மருந்தும் பலனளிப்பதில் மாறுபாடுகள் ஏற்படக்கூடும். மேலும், அடிக்கடி சாப்பிடுவதால், இன்சுலின் சுரப்பு அதிகமாக நடைபெற்று, உடலில் சர்க்கரை அளவு மாறுபடும். செரிமான பாதிப்புகளும் ஏற்படலாம். எனவே, நீரிழிவு (சர்க்கரை) பாதிப்பு உள்ளவர்களும், தினமும் மூன்று வேளைக்கு மிகாமல் உணவு எடுத்துக் கொண்டாலே போதுமானது.
80 வயதைக் கடந்தவர்களில் பலரும் சரிவரச் சாப்பிட மாட்டார்கள். தினமும் ஓரிரு வேளை மட்டுமே திட உணவுகளை எடுத்துக் கொள்வார்கள். உடலுழைப்பு அதிகம் இல்லாததால் இந்த வயதினருக்கு முறையாகப் பசி இருக்காது. பசிக்கு ஏற்ப அவர்களின் உணவுமுறையை அமைத்துக் கொண்டு, தினமும் 2 – 3 வேளை சாப்பிடலாம். பசி ஏற்படாத பட்சத்தில், உட்கொள்ளும் உணவின் அளவை இவர்கள் குறைத்துக் கொள்ளலாமே தவிர உணவைத் தவிர்க்கக் கூடாது.
இந்த நிலையில் நேரம் தாண்டி சாப்பிடும் சூழல் ஏற்பட்டால், திட உணவுகளைச் சாப்பிடாமல் இருப்பதே சரியானது. அதற்கு பதிலாக, சர்க்கரை சேர்க்கப்படாத பழச்சாறு, மோர், இளநீர் போன்ற திரவ உணவுகளைச் சாப்பிட்டு பசியைப் போக்கிக்கொண்டு, அடுத்த வேளை உணவை உரிய நேரத்தில் சாப்பிடலாம். எப்போதாவது இவ்வாறு நடக்கலாமே தவிர, அடிக்கடி நேரம் கடந்து சாப்பிடக் கூடாது. வேலை, சூழல் எதுவாக இருந்தாலும், நேரத்துக்குச் சாப்பிடுவதைப் பழக்கப்படுத்திக் கொள்வதே சரியானது” என்று விளக்கமளிக்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாங்குற வாண்டி: அப்டேட் குமாரு