ஹெல்த் டிப்ஸ்: குழந்தை பிறப்புக்குப் பிறகு செக்ஸ் ஆர்வமின்மைக்குக் காரணம் என்ன?
“குழந்தைக்குப் பிறப்புக்குப் பிறகு தம்பதிக்கு இடையே செக்ஸில் ஆர்வம் குறைந்து போவதற்குப் பல காரணங்கள் உண்டு’’ என்கிறார்கள் செக்ஸுவாலிட்டி எஜுகேட்டர்ஸ். அதைச் சரி செய்ய எடுக்க வேண்டிய முன்னெடுப்புகள் குறித்த ஆலோசனைகளையும் பகிர்கிறார்கள்.
“பொதுவாக, பெண்களுக்கு மகப்பேறு கடமைகளால் உடலில் ஹார்மோன் மாற்றங்கள் உண்டாகும்போது செக்ஸில் ஆர்வம் குறையலாம்.
கருவுற்றிருக்கும் சமயம், மெனோபாஸ் மற்றும் குழந்தை பிறந்ததற்குப் பின் உண்டாகும் போஸ்ட் பார்ட்டம் பிரச்னை போன்ற சூழல்களில் உள்ள பெண்களுக்கு செக்ஸில் ஆர்வம் குறைய வாய்ப்பிருக்கிறது.
இவை தவிர, ஆண் – பெண் இருவருக்கும் வேலை சார்ந்த மன அழுத்தம் மற்றும் ரிலேஷன்ஷிப் சார்ந்த பிரச்னைகள் ஆகியவையும் இணைக்கு இடையே செக்ஸ் ஆர்வத்தைக் குறைக்கும்.
குழந்தைக்குப் பிறப்புக்குப் பிறகு செக்ஸ் என்றாலே கட்டாயத்தின் பேரில் நிகழ்வதாக அதனாலேயே வலி மிகுந்ததாக சில பெண்களுக்கு ஆகிவிடுகிறது. இதுவும் செக்ஸ் ஆர்வத்தைக் குறைக்கக்கூடிய ஒன்றாகிவிடுகிறது.
முக்கியமாக… குழந்தை பிறந்ததற்குப் பிறகு, அதைக் கவனிக்கவே நேரம் சரியாக இருக்கும் என்பதால், வேலைப்பளு, சோர்வு சூழ்ந்து இருப்பார்கள். அப்போது, செக்ஸ் குறித்து சிந்திக்க அவர்களுக்குத் தோன்றாது.
இந்த நிலையில் கர்ப்பம், பாலூட்டும் காலம் போன்றவை பெண்கள் மட்டுமே சம்பந்தப்பட்டவை என்று நினைக்காமல், அவை இணையர்கள் சம்பந்தப்பட்டவை என்பதை கணவர் முதலில் புரிந்துகொண்டு, தங்கள் அன்பையும் ஆதரவையும் மனைவிக்குத் தாராளமாக வழங்க வேண்டும். கணவன் – மனைவிக்கு இடையிலான அந்நியோன்யத்தை அதிகரிக்க செக்ஸ் மட்டுமே உதவும் என்பதில்லை.
போஸ்ட்பார்ட்டம் காலகட்டத்தில் இருக்கும் மனைவிக்கு உடல் வலி, அசதி போன்றவை இருக்கும். அது போன்ற சமயங்களில் அன்போடு அவரின் கை கால்களைப் பிடித்துவிட்டால், ஒரு மசாஜ் கொடுத்தால் அவர்கள் அதை மிகவும் விரும்புவார்கள். ஆதரவாகவும் உணர்வார்கள். கணவன் மனைவி இடையிலான காதலும் இதன்மூலம் அதிகரிக்கும்.
அதேபோல, குழந்தையைப் பார்த்துக்கொள்வது, டயப்பர் மாற்றுவது, பாலூட்டும் சமயத்தில் குழந்தையைத் தூக்கி தாயிடம் கொடுப்பது போன்ற விஷயங்களை கணவர் செய்யும்போது குழந்தை பராமரிப்பு என்பது `கப்பிள் ஆக்ட்டிவிட்டி’யாக மாறும்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, மனைவி கருவுற்ற நாள் முதல் பிரசவ காலம்வரை கணவர் கூடவே இருந்து சப்போர்ட் பண்ணும்போது அதுவே இணைக்கு இடையிலான பிணைப்பை வலுவாக்கிவிடும்.
குழந்தை பிறந்து அதற்கு நான்கைந்து வயது ஆனபிறகும்கூட, இணைக்கு இடையே செக்ஸ் ஆர்வம் வராமல் இருந்தால், அவர்கள் ஓர் உளவியல் ஆலோசகரைப் பார்ப்பது நல்லது.
இவ்வளவு நாட்கள் கழித்தும் எதனால் இணைக்கு இடையே தாம்பத்யத்தில் நாட்டம் ஏற்படாமல் இருக்கிறது என்ற காரணத்தைக் கண்டறிய வேண்டியது அவசியம். பின்னர், அதற்கு ஏற்ப ஆலோசனைகளைப் பெற்று அதன்படி செயல்பட வேண்டும்.
செக்ஸ் ஆர்வம் இல்லாமல் இருக்கும்போது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொள்வதற்குப் பதிலாக, `நமக்கு ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்னையை சரி செய்ய நாம் என்ன செய்யலாம்?’ என்பது குறித்து கணவன் – மனைவி இருவருமே மனம் விட்டுப் பேச வேண்டும்.
இப்படி, இணையாக சேர்ந்து இந்தப் பிரச்னையை அணுகும்போது அதற்கான தீர்வு விரைவாகவும் சரியாகவும் கிடைக்கும்” என்கிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: மைசூர் போண்டா
’ஆடி’ வந்தது… கண் கலங்குது : அப்டேட் குமாரு
கடும் வெப்பத்தால் பாதிப்பிற்குள்ளாகும் பெண்கள்!
இன்னும் 5 நாட்களே உள்ளது… கூடுதலாக 1000 காலி பணியிடங்களை சேர்த்த டி.ஆர்.பி