உடல் சூட்டைத் தணித்து உடலுக்கு, உற்சாகத்தையும் சருமத்துக்கு பொலிவையும் தரும் எண்ணெய்க் குளியல், இன்றைய தீபாவளி திருநாளில் நடந்துமுடிந்திருக்கும். இன்றைய நாளில் எப்படிப்பட்ட உணவுகளை எடுத்துக் கொள்வது அனைவருக்கும் ஏற்றது?
“தீபாவளி திருநாளில் அவரவர் வயதுக்கேற்ப அசைவ உணவுகளைச் சாப்பிடலாம். ஆனால், அதிக அளவு பிரியாணி, பரோட்டா, எண்ணெயில் பொரித்த அசைவ உணவுகளைத் தவிர்க்கலாம்.
அசைவ சூப் வகைகளை எடுத்துக் கொள்ளலாம். சூப் வகைகள் எளிதில் ஜீரணமாவதுடன் உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தரும். கிரில்டு ஃபிஷ், சிக்கன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக பர்கர், பீட்சா போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
எண்ணெயை உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தேய்த்துக் குளிக்கும்போது உடலின் கழிவுகளை நீக்கக்கூடிய நிணநீரின் செயல்பாடு தூண்டப்பட்டு உடல் குளிர்ச்சியடையும்.
அப்படிப்பட்ட நிலையில் ஐஸ் வாட்டர், குல்ஃபி போன்ற குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடுவது நல்லதல்ல. சூப், ரசம் போன்ற சூடான திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். அத்துடன் எளிதில் செரிமானமாகக்கூடிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
உதாரணத்துக்கு… வேகவைத்த உணவுகளான இட்லி, இடியாப்பம், புட்டு போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். இதற்கு மசாலா சேர்த்த சைடிஷ் அதிகம் வேண்டாம்.
மதிய நேரத்தில் சாதத்துடன் சுண்டைக்காய், மணத்தக்காளி ஆகியவற்றில் ஏதாவது ஒரு வத்தக்குழம்பு, மிளகு ரசம், பிரண்டைத் துவையல், கறிவேப்பிலை, கொத்தமல்லி துவையல் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
நீர்ச்சத்து அதிகமுள்ள பூசணிக்காய், சுரைக்காய். பீர்க்கங்காய் போன்றவற்றையும் தவிர்க்கலாம். தயிருக்கு மாற்றாக நெய் சேர்க்கலாம். இரவு நேரத்துக்கும் எளிமையான, எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளே சிறந்தவை.
எண்ணெய்க் குளியல் எடுத்த அன்று உடலின் வெப்பம் கண் வழியே வெளியேறுவதால் கண் எரிச்சல் இருக்கும். குறிப்பாகத் தூக்கம் வரும்.
அந்த நிலையில் அளவுக்கு அதிகமாகச் சாப்பிட்டு தூக்கம் வருகிறதே என்று மதியம் இரண்டு, மூன்று மணி நேரம் தூங்கிவிட்டால் உடலின் வெப்பம் அதிகமாவதோடு உடல் சோர்வும் அதிகமாகும்.
எனவே, தூக்கம் வருவது போல இருந்தால் நாற்காலியில் அமர்ந்தபடி ஒரு குட்டித் தூக்கம் போடலாம்’’ என்கிறார்கள் வெல்னெஸ் நியூட்ரிஷனிஸ்ட்டுகள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…