ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம்
இணையவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐபோன் 15’ தொடரின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 போன்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ‘வண்டர்லஸ்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.79,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஐபோன்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வழக்கமான ‘லைட்னிங்’ சார்ஜிங் போர்ட் வசதியுடன் இல்லாமல், முதன்முறையாக ‘டைப் – சி’ போர்ட் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது.
ஐபோன் 15 (iPhone 15) & ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus)
512ஜிபி வரை சேமிப்பு அம்சம் கொண்ட இந்த ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ், இந்தியாவில் முறையே ரூ.79,990 மற்றும் ரூ.89,990 என்ற துவக்க விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2 நானோ சிம்களை இணைக்கும் வசதி கொண்ட இந்த ஐபோன்களில், ஐபோன் 15 6.1-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையுடனும், ஐபோன் 15 பிளஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையுடனும் அறிமுகமாகியுள்ளது. கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் பயன்படுத்தப்பட்ட ஏ16 பயோனிக் சிப்பே இந்த ஐபோன்களிலும் நிறுவப்பட்டுள்ளது.
கேமராவை பொறுத்தவரை, இந்த 2 ஐபோன்கள் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா என 2 பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. இந்த கேமராக்கள் 4x ஆப்டிகல் ஜூம் வசதியையும் கொண்டுள்ளது. செல்ஃபிகளுக்காக 12 மெகாபிக்சல் ட்ரூ-டெப்த் கேமராவை ஆப்பிள் நிறுவனம் வழங்கியுள்ளது.
கருப்பு, நீலம், பச்சை, மஞ்சள் மற்றும் பிங்க் என இந்த ஐபோன்கள் 5 வண்ணங்களில் விற்பனைக்கு வரவுள்ளன. ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் ஃபோன்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15 அன்று துவங்கும் என்றும், அவை செப்டம்பர் 22 அன்று விற்பனைக்கு வரும் என்றும் ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபோன் 15 ப்ரோ (iPhone 15 Pro) & ஐபோன்15 ப்ரோ மேக்ஸ் (iPhone 15 Pro Max)
ஐபோன் 15 போல் இல்லாமல், ஆப்பிளின் புதிய ‘ஏ17 பயோனிக்’ சிப்புடன் அறிமுகமாகியுள்ள ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய ஐபோன்கள், இந்தியாவில் முறையே ரூ.1,34,900 மற்றும் ரூ.1,59,900 என்ற ஆரம்ப விலைகளில் அறிமுகமாகியுள்ளது. இந்த ஐபோன்கள் 1டிபி வரை சேமிப்பு வசதி கொண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐபோன் 15 ப்ரோ 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையையும் மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் 6.7-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED திரையையும் கொண்டுள்ளது.
3 பின்புற கேமராக்களை கொண்டு இந்த ஐபோன் 15 ப்ரோ மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 12 மெகாபிக்சல் 3x டெலிபோட்டோ கேமரா என 3 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. செல்ஃபிகளுக்காக ஐபோன் 15 சீரிஸ் போன்களை போலவே, ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் ஐபோன்களிலும் 12 மெகாபிக்சல் ட்ரூ-டெப்த் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் முன்பதிவும் செப்டம்பர் 15 அன்றே துவங்க உள்ளது. செப்டம்பர் 22 அன்று இந்த ஐபோன்கள் விற்பனைக்கு வருகின்றன. கருப்பு டைட்டேனியம், வெள்ளை டைட்டேனியம், நீல டைட்டேனியம், நேச்சுரல் டைட்டேனியம் என 4 வண்ணங்களில் இந்த ஐபோன்கள் கிடைக்க உள்ளன.
ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் & ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2
ஐபோன் 15 சீரிஸ்ஸ் போன்களுடன், ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் மற்றும் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2 என ஸ்மார்ட்-வாட்ச்களையும் அந்நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.
அலுமினியம் & ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என 2 வகைகளில், மிட்நைட், ஸ்டார்நைட், சில்வர், சிவப்பு, பின்க் என 5 வண்ணங்களில், இந்தியாவில் ரூ.41,900 என்ற விலையில் ஆப்பிள் வாட்ச் 9 சீரிஸ் விற்பனைக்கு வரவுள்ளது.
மறுபுறத்தில், அல்பைன் லூப், டிரைல் லூப், ஓசென் பேண்ட் என 3 வகைகளில், 9 வண்ணங்களில் அறிமுகமாகியுள்ள ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா 2, இந்தியாவில் ரூ.89,900 என்ற விலையில் விற்பனைக்கு வரவுள்ளது.
இந்த 2 ஸ்மார்ட் வாட்ச்களுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிய நிலையில், மற்ற ஐபோன்களை போலவே இவையும் செப்டம்பர் 22 அன்று விற்பனைக்கு வரவுள்ளது.
முரளி
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!
டீசல் கார்களுக்கு கூடுதலாக 10 சதவிகித ஜிஎஸ்டி வரியா?