அக்னி நட்சத்திரம் இன்னும் தொடங்கவேயில்லை. ஆனால், அதற்குள் வெப்ப அலை அச்சுறுத்துகிறது. குழந்தைகள், முதியவர்கள், உடல் நலிவு கண்டவர்களை கோடை கடுமையாக வாட்டுகிறது.
கொளுத்தும் வெயில், அக்னி நட்சத்திரம், வெப்ப அலை என எதுவாக இருப்பினும், உடலின் நீரேற்றத்தை முறையாக பராமரிக்கும் வகையில் உணவுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்.
கோடையில் எளிதாகக் கிடைக்கும், நாம் நன்கறிந்த, எளிமையான இவற்றை உணவில் போதுமான அளவுக்கு சேர்த்துக்கொள்வது, கோடையைக் குளுமையாக்கும்.
இளநீர்
செயற்கையான பானங்கள், சோடா, கோலா ஆகியவற்றைவிட இயற்கையாக கிடைக்கும் இந்த அமுது இளநீர், கோடையில் உடல் இழக்கும் நீர்ச்சத்தினை வெகுவாக ஈடுகட்டும்.
இயற்கையான என்சைம்கள், தாதுக்கள், வைட்டமின்கள் ஆகியவற்றோடு, உடலின் சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவை மீட்டெடுக்கவும் இளநீர் உதவும்.
தர்ப்பூசணி
தர்ப்பூசணியில் 90 சதவிகிதத்துக்கும் மேலாக நீர்ச்சத்து நிறைந்திருக்கிறது. கூடவே எலக்ட்ரோலைட்டுகள், அவசியமான வைட்டமின்களையும் தர்ப்பூசணி வாரி வழங்கும். உடலின் நீரேற்றத்தை பராமரித்து குளிர்ச்சியாகவும் வைத்திருப்பதில் தர்ப்பூசணிக்கு ஈடு இணை கிடையாது.
வெள்ளரி
நீர்ச்சத்து அதிகம்; அதே வேளையில் கலோரிகள் குறைவு. எனவே டயட்டில் இருப்பவர்கள் கூட வெள்ளரியை தேவையான அளவு சாப்பிடலாம். அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், சாலட் போன்று வேறு உணவுகளுக்கும் உதவியாக சேர்த்துக்கொள்ளலாம். வைட்டமின் ஏ, பி மற்றும் கே ஆகியவை வெள்ளரியில் கிடைக்கும்.
தக்காளி
தக்காளியில் லைகோபீன் என்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது. நிறைய தண்ணீர் மற்றும் வைட்டமின்கள் ஏ மற்றும் சி உள்ளது. சிறுநீரகப் பிரச்சினை உள்ளவர்கள், தக்காளியை தவிர்க்கலாம்.
முலாம்பழம்
முலாம்பழம் குளிர்ச்சியோடு, பலவகையிலான சத்துகளையும் வழங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு, இதய ஆரோக்கியத்தின் மேம்பாடு, பார்வை சீரமைப்பு, உடல் எடைக் குறைப்பு, குடல் ஆரோக்கியத்தின் மேம்பாடு என ஏராளமான அனுகூலங்களை முலாம்பழம் சேர்க்கும்.
கோடையில் எளிதில் கிடைக்கும் இவற்றைக் கொண்டு உடலின் நீரேற்றத்தை முறையாக பராமரிக்கவும், இதர சத்துகளைப் பெறவும் செய்யலாம்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : பனானா ரோல்ஸ்
’முழு பக்க அளவில் மன்னிப்பு கேட்க வேண்டும்’ : பதஞ்சலி வழக்கில் உத்தரவு!
முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி!
கேரளாவில் பறவைக் காய்ச்சல்: தமிழக எல்லையில் கடும் கட்டுப்பாடு!