ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் அந்தர் பல்டி அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணி தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு நடைபெறும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.
அந்த வகையில், முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதே போன்று 2ஆவது ஒரு நாள் போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், இரண்டு அணிகளும் மோதும் கடைசி ஒரு நாள் போட்டி நேற்று(ஜூன் 9) நடைபெற்றது.
இதில், டாஸ் வென்று முதலில் ஆடிய ஐக்கிய அரபு எமீரேட்ஸ் அணி 36.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 184 ரன்கள் எடுத்தது.
இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி நான்கு விக்கெட்டுகளை எடுத்தார்.
இதனிடையே, ஆட்டத்தின் ஒவ்வொரு விக்கெட்டையும் அவர் எடுத்த போது அந்தர் பல்டி அடித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த போட்டியில் 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கெவின் சின்க்ளேர் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
இந்நிலையில், அவர் அந்தர் பல்டி அடித்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மு.வா.ஜெகதீஸ் குமார்
‘லஸ்ட் ஸ்டோரிஸ்’ – ஹாட் சீனில் தமன்னா…கோடிக்கணக்கில் சம்பளம்!
‘ஊதியம் கிடையாது’ : பகுதி நேர ஆசிரியர்கள் ஷாக்!