ஹெல்த் டிப்ஸ்: நகம் கடிக்கும் பழக்கம்: விடுபட எளிய வழிகள்!

Published On:

| By Minnambalam Desk

‘நகத்தை கடிக்காதேன்னு எத்தனை தடவை சொல்றது… முதல்ல வாயிலருந்து கையை எடு…’ என்று பெரியவர்கள் சொவ்வதையும், ‘அய்யோ… நான் வேணும்னு செய்யலை. டென்ஷன் ஆச்சுன்னா என்னை அறியாம நகத்தைக் கடிக்க ஆரம்பிச்சுடுறேன்…’ என்று பதில் வருவதையும் நாம் அவ்வப்போது பார்த்திருப்போம்.

நகம் கடிப்பவர்களில், ‘எப்படி இந்தப் பழக்கத்தை விடறதுன்னே தெரியலை’ என்று புலம்புபவர்கள் பலர். ‘நகத்தை கடிப்பதால் உடல் உபாதைகள் ஏற்படலாம்’ என்று தெரிந்தும்கூட அதைச் செய்பவர்களே அதிகமானோர்.

இந்தப் பழக்கத்திலிருந்து மீள்வதற்கான எளிய வழிமுறைகள் குறித்து விளக்குகிறார்கள் பொதுநல மருத்துவர்கள். Ways to Stop Biting Your Nails

பலருக்கும் நகம் கடிக்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருக்கும். ஒரே நாளில் இந்தப் பழக்கத்தை முற்றிலுமாக விட முயற்சி செய்வது வீண். நகம் கடிப்பதை ஒவ்வொரு விரலாக குறைத்துக்கொண்டு வரவும். முதலில், கட்டைவிரல் நகத்தை கடிக்காமல் இருங்கள். அதைத் தொடர்ந்து சுண்டு விரல், அடுத்து மோதிர விரல்… இப்படி முயற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.

வேப்பெண்ணையைப் போன்ற கசப்பான சுவையுள்ள ஏதாவதொன்றை நகத்தில் தேய்த்துக்கொள்ளுங்கள். இதனால், நகம் கடிக்கும்போதெல்லாம் கசப்புணர்ச்சி உண்டாகி, நகத்தின் மீதான உங்கள் கவனத்தை அதிகப்படுத்தும்; அந்தப் பிரச்னையிலிருந்து வெளிவர உதவும்.

வாய்ப்பிருந்தால், வாரத்துக்கு ஒருமுறை நகப் பராமரிப்பு ‘மேனிக்யூர்’ (Manicure) செய்துகொள்ளலாம். முடியாதவர்கள், குறிப்பிட்ட காலத்துக்கு விரல்களில் பேண்டேஜ் மாதிரி எதையாவது சுற்றிக்கொள்ளலாம்.

பதற்றமான சூழலில் சிலரால் நகத்தை கடிக்காமல் இருக்கவே முடியாது. அதுபோன்ற நேரத்தில் வேறொரு நல்ல பழக்கத்தை பழக்கப்படுத்திக் கொள்ளலாம். உதாரணமாக, ஸ்ட்ரெஸ் பால் உபயோகிப்பது, கை கழுவுவது, வாய் கொப்பளிப்பது, சாப்பிடுவது போன்றவை. கை மற்றும் வாய் தொடர்பான பயிற்சிகளாக இவை இருக்க வேண்டும்.

கோபம், வருத்தம், ஏமாற்றம், எதிர்பார்ப்பு… என எந்தச் சூழல் உங்களை நகம் கடிக்க அதிகம் தூண்டுகிறது என கவனியுங்கள். அந்தச் சமயத்தில் அதிக எச்சரிக்கையோடு செயல்படுங்கள்.

என்ன செய்தும் நகம் கடிக்கும் பழக்கத்திலிருந்து விடுபட முடியவில்லை என்பவர்கள், தயங்காமல் சரும மருத்துவரையும், மனநல மருத்துவரையும் அணுகி ஆலோசனை பெறலாம் என்று அறிவுறுத்துகிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share