நம்மில் பலருக்கும் கோடைக்காலத்தில் அதிகமாக களைப்பு ஏற்படுவதுண்டு. இதைத் தடுக்கும் எளிய வழிகளைக் கூறுகின்றனர் பொதுநல மருத்துவர்கள். summer fatigue
அலுவலகத்திலும் வீட்டிலும் நீங்கள் அதிக நேரம் அடைப்பட்டு இருந்தால் சிறிது நேரம் நல்ல காற்றோட்டமான இடத்துக்கு வாருங்கள். காற்றை ஆழ்ந்து சுவாசியுங்கள். வேலைகளை முறைப்படுத்திச் செய்யுங்கள். நன்கு திட்டமிட்டு, நேர மேலாண்மையைப் பின்பற்றி, நிதானமாகச் செய்தால் போதும்.
ஏசி அறைகளில் பணிபுரிவோருக்கு நீரிழப்பு ஏற்படுவது வெளியில் தெரியாது. அவர்கள் தேவைக்கு ஏற்ப தண்ணீர் அருந்த வேண்டும். காபி, தேநீர், கோலா மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதைக் குறைத்துக் கொள்ளுங்கள். புகைப்பிடிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.
மேற்கத்திய உணவு வகைகளையும் அதிக எண்ணெய் உள்ள, கொழுப்புள்ள உணவு வகைகளையும் குறைத்துக்கொண்டு, காய்கறி, பழங்களைத் தேவையான அளவுக்குச் சாப்பிடுங்கள். சமச்சீரான இந்தியப் பாரம்பரிய உணவு வகைகளைச் சாப்பிடுவது நன்மை பயக்கும்.
தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்குவது நல்லது. இதற்கு அதிகாலை நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி உதவும் முடிந்தால் மாலையில் யோகாசனம் செய்யலாம்.