கடந்த மார்ச் 19 அன்று, ரியல்மீ நிறுவனம் தனது புதிய நார்சோ 70 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்திருந்தது. இந்நிலையில், விவோ நிறுவனம் அந்த ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக ஒரு புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கியுள்ளது.
விவோ டி3 5ஜி என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 50 மெகாபிக்சல் கேமரா, 5,000 mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
விவோ டி3 5ஜி-யின் விலை
ரியல்மீ நார்சோ 70 ப்ரோ-வை போலவே, விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனும் இந்தியாவில் 2 வகைகளில் அறிமுகமாகியுள்ளது. அதில், 8GB ரேம் + 128GB சேமிப்பு கொண்ட வகை ரூ.17,999 என்ற விலையிலும், 8GB ரேம் + 256GB சேமிப்பு கொண்ட வகை ரூ.19,999 என்ற விலையிலும் விற்பனைக்கு வரவுள்ளது.
விவோ டி2 ஸ்மார்ட்போனின் அடுத்த வெர்சனாக அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்போன் காஸ்மிக் ப்ளூ, கிரிஸ்டல் ஃப்ளேக் என 2 வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த விவோ டி3 ஸ்மார்ட்போனின் விற்பனை, பிரத்தேயகமாக பிளிப்கார்ட் தளத்தில் வரும் மார்ச் 27 அன்று மதியம் 12 மணிக்கு துவங்குகிறது.
இந்த விற்பனையில், ஹெடிஎஃப்சி அல்லது எஸ்பிஐ கார்டுகளை பயன்படுத்தி விவோ டி3 ஸ்மார்ட்போனை பெறுவோருக்கு, பிளிப்கார்ட் நிறுவனம் ரூ.2,000 தள்ளுபடியையும் வழங்குகிறது.
விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள்
விவோ டி3 5ஜி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஃபன்டச் OS 14 மென்பொருள் அமைப்பு கொண்டு அறிமுகமாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் டிமென்சிட்டி 7200 5G சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
திரையைப் பொறுத்தவரை, விவோ டி3 ஸ்மார்ட்போன் 6.67-இன்ச் fHD+ AMOLED திரையை கொண்டுள்ளது. மேலும், 120Hz திரை புதுப்பிப்பு விகிதம், 1,800 நிட்ஸ் ஒளிரும் திறன், பன்ச்-ஹோல் திரை, இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் உள்ளிட்ட அம்சங்களையும் கொண்டுள்ளது.
விவோ டி3 ஸ்மார்ட்போனில், 2 பின்புற கேமராக்கள் இடம்பெற்றுள்ளது. முதலாவதாக, OIS வசதியுடன் கூடிய சோனி IMX822 சென்சார் கொண்ட 50 MP முதன்மை கேமரா. இரண்டாவதாக, பொக்கே மோட் உடன் கூடிய 2 MP கேமரா.
மேலும், இரவு நேரங்களில் மேம்படுத்தப்பட்ட படங்களை எடுக்க, இந்த ஸ்மார்ட்போனில் பிளிக்கர் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி, OIS வசதியுடன் 4K தரத்தில் வீடியோ எடுக்கும் வசதியையும் விவோ டி3 கொண்டுள்ளது.
முன்புறத்தில், செல்ஃபிக்களுக்காக 16 MP கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, விவோ டி3 5000 mAh பெரிய பேட்டரியுடன் 44W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டு அறிமுகமாகியுள்ளது. மேலும், டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் வசதியையும் இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது.
–மகிழ்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பொன்முடி முதல் தேஜஸ்வி சூர்யா வரை: ஒரே நாளில் விசாரிக்கப்பட்ட முக்கிய வழக்குகள்!
நெல்லை அதிமுக வேட்பாளர் சிம்லா முத்துச்சோழன் மாற்றம்: பின்னணி இதுதான்!